திருமண விழாவில் 17 பேர் மின்னல் தாக்கி பலி! மாப்பிள்ளை படுகாயம்
வங்கதேசத்தில் திருமண விழாவில் பங்கேற்றவர்கள் மீது மின்னல்கள் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் பெய்துவரும் பருவமழை இந்த ஆண்டு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மேற்கு மாவட்டமான Chapai Nawabganj-ல் உள்ள Shibganj என்னும் பகுதியில் திருமண நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பலரும் பங்கேற்றனர்.
இந்த சமயத்தில் மாப்பிள்ள வீட்டினர் பத்மா நதியில் படகு மூலமாக மணப்பெண் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், கனமழையுடன் மின்னல்களும் தாக்கியுள்ளது.
இதையடுத்து, சிலர் தங்கள் படகில் இருந்து இறங்கி ஒதுங்கியுள்ளனர். அப்போது, அந்த பகுதியில் அடுத்தடுத்து மின்னல்கள் தாக்கியுள்ளன.
இதில், 17 பேர் வரை உயிரிழந்தனர். மாப்பிள்ளை உட்பட பலர் படுகாயம் அடைந்தார். மணப்பெண் சம்பவ இடத்தில் இல்லாததால் அவர் மின்னல் தாக்குதலில் இருந்து தப்பினார்.
ஆண்டுதோறும் வங்கதேசத்தில் மின்னல் தாக்குதலால் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் மட்டும் மின்னல் தாக்குதல் காரணமாக 200 பேர் அங்கு உயிரிழந்தனர்.
அதில் அதிகபட்சமாக ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
