பறக்கும் விமானத்தினுள் பறந்த வெளவாலால் பரபரப்பு... அவசர அவசரமாக தரையிறக்கிய விமானி
இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூஜெர்சிக்கு புறப்பட்ட விமானத்தில் வெளவால் காணப்பட்டதால் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் நியூஜெர்சி நெவார்க் நகரத்திற்கு நேற்று அதிகாலை புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட அரைமணி நேரத்திற்குப் பிறகு விமான ஊழியருக்கான கேபினில் வெளவால் ஒன்று இருந்தது தெரியவந்தது. மட்டுமின்றி அந்த வெளவாலானது விமானத்தினுள் பறந்து பயணிகளையும் ஊழியர்களையும் பயத்தில் அலற வைத்துள்ளது.
இந்த தகவலை ஊழியர்கள் விமானிகளுக்கு தெரிவித்தனர். உடனடியாக விமானிகள் விமானத்தை மீண்டும் டெல்லிக்கு திருப்ப முடிவு செய்தனர்.
விமானம் புறப்பட்டபின், உடனடியாக திரும்பியதால் அவசரம் காரணமாக தரையிறங்குகிறது என அறிவிக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட பின்னர்தான், விமானத்தில் வெளவால் காணப்பட்டதால், தரையிறக்கப்பட்டது தெரியவந்தது.
பின்னர் வனத்துறை ஊழியர்கள் அழைக்கப்பட்டு, கேபினில் இருந்த வெளவால் அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து புகை மூலம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, வெளவாலில் எச்சங்களையும் அப்புறப்படுத்தியதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, விமானப் பயணிகள் மாற்று விமானம் மூலம் பகல் 11.35 மணிக்கு நெவார்க் புறப்பட்டனர்.