இது மட்டும் நடந்தால்….5,00,000 வீரர்களுடன் பெலாரஸ் போரில் நுழையும்! ஜனாதிபதி எச்சரிக்கை
உக்ரைனால் தாக்கப்பட்டால் மட்டுமே பெலாரஸ் போரில் நுழையும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ வியாழக்கிழமை எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் நட்பு நாடு
உக்ரைன் ரஷ்யா போர் தாக்குதல் தொடங்கிய ஆரம்ப நாட்கள் முதல் இதுவரை ரஷ்யாவிற்கு ஆதரவாக பெலாரஸ் செயல்பட்டு வருகிறது.
போரின் தொடக்க நாட்களில் பெலாரஸ் பகுதியில் இருந்து ரஷ்ய வீரர்கள் உக்ரைனுக்குள் நுழைந்ததாகவும், பல்வேறு தருணங்களில் பெலாரஸ் பிராந்தியத்தில் இருந்து ஏவுகணைகள் உக்ரைனுக்குள் ஏவப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
AP
இதற்கிடையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ சந்திப்பு மற்றும் ரஷ்யா-பெலாரஸ் இடையிலான இராணுவ பயிற்சிகள் ஆகியவை உலக அரங்கில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
பெலாரஸ் போரில் நுழையும்
இந்நிலையில் போரில் நாங்கள் தாக்கப்பட்டால் மட்டுமே, பெலாரஸ் போரில் நுழையும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ வியாழக்கிழமை எச்சரித்துள்ளார்.
மேலும் பெலாரஸ் மீது ஆக்கிரமிப்பு செய்தால், பதில் மிகவும் கொடூரமானதாக இருக்கும், அத்துடன் போர் முற்றிலும் மாறுபட்ட தன்மையைப் பெறும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேற்கத்திய நாடுகள் பெலாரஸை போருக்கு இழுக்க விரும்புகிறது என்று உளவுத்துறை அறிக்கைகள் வெளிவந்து இருப்பதாக குறிப்பிட்ட லுகாஷென்கோ, பெலாரஸ் ராணுவம் தேவைப்பட்டால் 5,00,000 வீரர்களை சேர்க்கும் என்று எச்சரித்துள்ளார்.
அதைப்போல ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உட்பட உக்ரைனின் அரசியல்வாதிகளிடம் இருந்து வேறுபட்ட பார்வை இருப்பதால் உக்ரைன் ராணுவத்துடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ குறிப்பிட்டுள்ளார்.