இந்தியாவின் கோவாக்சின் நிறுவனம் - பிரேசில் அரசு இடையே மோதல்!
கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கும், பிரேசில் அரசாங்கத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்திய மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பில், தென்னமெரிக்க நாடான பிரேசிலுக்கு 2 கோடி (20 மில்லியன்) டோஸ் தடுப்பு மருந்து முன்னதாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
324 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இந்தத் தடுப்பு மருந்தை பிரேசில் அரசு கொள்முதல் செய்தது.
தற்போது பிரேசில் அரசுக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் இந்த தடுப்பு மருந்து விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.
பிரேசிலின் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு (ANVISA) பாரத் பயோடெக் தடுப்பு மருந்துகளுக்கு அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை என பிரேசில் அரசு கூறியுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்த பாரத் பயோடெக் தலைமை, கடந்த ஜூன் 4-ஆம் தேதி பிரேசிலிய சுகாதாரத்துறை தங்கள் தடுப்பு மருந்துக்கு அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளதாக கூறியுள்ளது.
பாரத் பயோடெக்கின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, பிரேசிலிய சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு ஓர் தகவலை வெளியிட்டது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்புமருந்தான கோவாக்சினின் அவசர தேவை பயன்பாட்டுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 4-ஆம் தேதி பாரத் பயோடெக் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கப்பட வில்லை என்றும் கோவாக்சின் தடுப்புமருந்து "குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு விநியோகிக்கப்படவேண்டும்" என்றும் பிரேசிலிய சுகாதாரத்துறை-ANVISA தெரிவித்திருந்ததாக கூறியுள்ளது.
இது பாரத் பயோடெக் மற்றும் பிரேசில் அரசுக்கு எதிரான மோதலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.