இந்தியாவிற்கு அடுத்த பின்னடைவு... ஈரான் தொடர்பில் தடை விதித்த அமெரிக்கா
கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியாவிற்கான அதி முக்கியமான வழித்தடமாகப் பார்க்கப்பட்டு வந்த ஈரானின் சபாஹர் துறைமுகம், அமெரிக்காவால் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கா எச்சரிக்கை
செப்டம்பர் 29 க்குப் பிறகு, சபாஹர் துறைமுகத்துடன் தொடர்புடைய எந்தவொரு நடவடிக்கையும் தடைகளுக்கு வழிவகுக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நகர்வு இந்தியாவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது சபாஹர் துறைமுகம் மேம்பாட்டிற்காக இந்தியா ஏற்கனவே பல பில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளது.
வெளியான தகவல்களின் அடிப்படையில், ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகத்தை இயக்கும் தனிநபர்கள் இந்த மாத இறுதியில் இருந்து பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்வார்கள் என்று ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது ஈரானிய ஆட்சியை தனிமைப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகபட்ச அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது. ஈரானின் சபாஹர் துறைமுகம் இந்தியாவிற்கு ஒரு வர்த்தக துறைமுகம் மட்டுமல்ல, ஒரு மூலோபாய சொத்தாகவும் உள்ளது.
2023 ஆம் ஆண்டில், இந்தியா சபாஹர் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு 20,000 டன் கோதுமையை ஏற்றுமதி செய்தது. 2021ல் உலகளவில் கோவிட் பெருந்தொற்று தாக்கத்தை ஏற்படுத்தியபோது, மருந்துகளும் தடுப்பூசிகளும் இந்த துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு வந்தன.
பாகிஸ்தானைத் தவிர்த்து
இந்த திட்டம் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் (INSTC) ஒரு பகுதியாகும், மேலும் ஐரோப்பாவிற்கு நேரடி விநியோக பாதையை உருவாக்க இந்தியா, ஈரான் மற்றும் ரஷ்யாவை இணைக்க முடியும்.
ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதிக்கான முக்கிய நுழைவாயிலாக சபாஹர் துறைமுகத்தின் ஷாஹித் பெஹெஷ்டி முனையத்தை இந்தியா பயன்படுத்தி வருகிறது.
இந்த முனையம் இந்தியா பாகிஸ்தானைத் தவிர்த்து, வர்த்தகம், மனிதாபிமான உதவிகளை எளிதாக்க அனுமதிக்கிறது. தற்போது சபாஹர் துறைமுகத்தை இந்தியா பயன்படுத்த் முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மீது வரி சுமத்தியுள்ள ட்ரம்ப் நிர்வாகம், தற்போது ஈரான் தொடர்பில் பொருளாதார தடை விதிக்கவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |