சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும் - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிந்து நதி நீர் நிறுத்தம்
இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
இதனையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்களின் விசாவை ரத்து செய்வது, சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
தொடர்ந்து, பாகிஸ்தானும் இந்தியா விமானங்கள் வான் பரப்பில் பறக்க தடை விதித்தது, சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது. சிந்து நதி நீரை நிறுத்துவது போருக்கு சமம் என அறிவித்தது.
அமைச்சர் சர்ச்சை பேச்சு
இந்நிலையில், சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால், இந்தியர்களின் ரத்தம் ஒடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் மகனும், பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான பிலாவல் பூட்டோ பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், "நான் இந்தியாவுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். சிந்து நதி எங்களுடையது. அந்த நதி தொடர்ந்து எங்களுடையதாகவே இருக்கும்.
ஒன்று நமது தண்ணீர் அந்த நதியில் பாயும். இல்லையென்றால் அவர்களின் ரத்தம் ஓடும். தங்கள் உள்நாட்டு பாதுகாப்பில் கோட்டை விட்ட இந்தியா, மக்களின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தானை பலிகடா ஆக்குகிறது" என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |