எப்ஸ்டீன் உடன் பழக காரணம் அதுதான் - உண்மையை உடைத்த பில்கேட்ஸ்
எப்ஸ்டீன் ஆவணங்களில் தன்னுடைய பெயர் இருந்தது குறித்து பில்கேட்ஸ் விளக்கமளித்துள்ளார்.
எப்ஸ்டீன் ஆவணங்கள்
அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட பல்வேறு பிரபலங்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இளம் சிறுமிகளை தனது தீவுக்கு கடத்தி முக்கிய புள்ளிகளுடன் கட்டாயப்படுத்தி, பாலியல் தேவைக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். அவரின் மர்மம் தொடர்பாக இன்னும் சர்ச்சை நீடிக்கிறது.

தற்போது அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான பக்க ஆவணங்களை வெளியிட்டு வருகிறது. இதில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பில் கிளிண்டன், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, எலோன் மஸ்க், பில்கேட்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் உள்ளது உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதில், ரஷ்யா பெண்களுடன் உறவு கொண்டதால் பில்கேட்ஸ்க்கு பால்வினை நோய் ஏற்பட்டதாகவும், தனது மனைவிக்கு தெரியாமல் அதற்கு மருந்து வழங்குமாறு கேட்டதாகவும், பின்னர் இது குறித்த மின்னஞ்சல்களை நீக்குமாறு பில்கேட்ஸ் மன்றாடியதாகவும் எப்ஸ்டீன் தனக்கு தானே அனுப்பிய ஈமெயிலில் குறிப்பிட்டுள்ளார்.
"தனது திருமண வாழ்க்கையில் நடந்த மிக வேதனையான காலங்களை இந்த ஆவணங்கள் நினைவுபடுத்துவதாகவும், இந்த ஆவணங்கள் குறித்த கேள்விகளுக்கு பில்கேட்ஸ் விரிவாக பதிலளிக்க வேண்டும்" என பில்கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா தெரிவித்துள்ளார்.
மௌனம் கலைத்த பில்கேட்ஸ்
இது குறித்து விளக்கமளித்த பில்கேட்ஸ், "எப்ஸ்டீன் குறிப்பிட்டது போன்ற மின்னஞ்சல்களை ஒருபோதும் அனுப்பப்படவில்லை. அந்த மின்னஞ்சல் பொய்யானது. அவருடைய எண்ணம் என்னவாக இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஏதேனும் ஒரு வகையில் என்னை தாக்க முயற்சித்தாரா எனத் தெரியவில்லை.

நான் 2011 ஆம் ஆண்டில் தான் அவரை முதல்முறையாக சந்தித்தேன். 3 ஆண்டுகளில் பலமுறை அவருடன் இரவு விருந்தில் கலந்து கொண்டேன். ஆனால் அவருடைய கரீபியன் தீவுக்கு ஒருமுறை கூட சென்றதில்லை. பெண்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை.
அவர் பல பணக்காரர்களைத் தெரிந்தவர் என்பதால், அவர்களிடம் உலக சுகாதாரத்திற்கு நிதியைப் பெற முடியும் என்று நினைத்தேன். ஆனால் அது பயனற்ற முயற்சி என பின்னர் தெரிந்தது. எப்ஸ்டீனுடன் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் வருந்துகிறேன், மன்னிப்பு கோருகிறேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |