13 ஆண்டுகளாக தினமும் 28 டொலர் அபராதம் செலுத்திய பில்கேட்ஸ் - ஏன் தெரியுமா?
13 ஆண்டுகளாக நாளொன்றுக்கு 28 டொலர் அபராதம் செலுத்தியுள்ளார் பில்கேட்ஸ்.
பில்கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ், கிட்டதட்ட 18 ஆண்டுகள் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். தற்போது 115.1 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன், உலகப் பணக்காரர் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார்.
பில்கேட்ஸ், சுமார் 13 ஆண்டுகளுக்கு தினசரி 28 டொலர் அபராதம் செலுத்திய சுவாரஸ்ய விடயம் வெளியாகியுள்ளது.
கார் பிரியரான பில்கேட்ஸ், 1988 ஆம் ஆண்டு போர்ச் 959 கோம்ஃபோர்ட் (Porsche 959 Komfort) கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்த கார், 2.85 லிட்டர் இரட்டை-டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பிளாட்-சிக்ஸ் எஞ்சின் மூலம் இயக்கப்பட்டது. மின்னணு முறையில் சரிசெய்யக்கூடிய சஸ்பென்ஷனைக் கொண்டிருந்தது.
இத்தகைய அதிநவீன வசதிகள் கொண்ட இந்த மொடலில், 337 கார்களை மட்டுமே போர்ச் நிறுவனம் தயாரித்திருந்தது.
ஆனால் இதில் இருந்த சிக்கல் என்னவென்றால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) விதித்த உமிழ்வு தரநிலைகளை இந்த கார் பூர்த்தி செய்யவில்லை என்பதால், அமெரிக்காவில் இறக்குமதி செய்ய அனுமதி இல்லை.
கார் சியாட்டில் துறைமுகத்தை வந்தடைந்தபோது, இந்த காரை பதிவு செய்வது அல்லது ஓட்டுவது சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டது.
13 ஆண்டுகளாக தினமும் அபராதம்
ஆனால், காரின் உரிமையாளர் நாள் ஒன்றுக்கு 28 டொலர் செலுத்தினால் காரை கிடங்கில் வைத்திருப்பதாக தெரிவித்தனர். அரசு விரைவில் இறக்குமதி விதிகளை தளர்த்தும் என்ற நம்பிக்கையில், பில்கேட்ஸ் இந்த சமரசத்திற்கு ஒப்புக்கொண்டார்.
ஆனால், 13 ஆண்டுகளுக்கு பிறகே, அந்த காரை இறக்குமதி செய்வதற்கு ஏற்ற வகையில் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டது. ஆண்டுக்கு, 2500 மைல்கள் அந்த காரை ஒட்டிக்கொள்ளலாம் என அறிவித்த பிறகு, பில்கேட்ஸ் தனது காரை வீட்டிற்கு எடுத்து சென்றார்.
அதுவரை, 13 ஆண்டுகளாக, அதாவது 4745 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 28 டொலர் அபராதம் செலுத்தியுள்ளார். அவ்வப்போது, 500 டொலர் பத்திரப் புதுப்பித்தல்களுக்காக செலுத்தியுள்ளார்.
இப்படியாக, அன்றைய காலகட்டத்திலே 1,32,000 டொலர்களுக்கு அதிகமான தொகையை இதற்காக செலுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |