120-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட விமானம்! நடுவானில் விமானிக்கு மாரடைப்பு: அதன் பின் நடந்த சம்பவம்
வங்கதேச தலைநகர் டக்காவிற்கு 120-க்கும் மேற்பட்ட பயணிகளோடு புறப்பட்ட விமானத்தில், விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
ஒமனின் மஸ்கட்டிலிருந்து, வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு 126 பயணிகளுடன் போயிங் ரக விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது திடீரென விமானிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் இது குறித்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது விமானம் ராய்ப்பூர் அருகே பறந்ததால், உடனடியாக கொல்கத்தா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
ஆனால், அதைவிட அருகேயுள்ளது நாக்பூர் விமான நிலையம் என்பதால் அங்கே தரையிறங்க கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அறிவுறுத்தியதால், காலை 11.40 மணியளவில் விமானம், நாக்பூரில் தரையிறங்கியுள்ளது.
இதையடுத்து உள்ளூர் மருத்துவமனையொன்றில் விமானி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரின் உடல் நிலை குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை, ஆனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போயிங் ரக விமானம் பிமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்சை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.