கோவையில் அண்ணாமலை வெற்றி பெற.. கைவிரலை துண்டித்த பாஜக பிரமுகர்
கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெற பாஜக நிர்வாகி ஒருவர் கைவிரலை துண்டித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக நிர்வாகி
தமிழக மாவட்டமான கடலூர், ஆண்டாள் முள்ளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம். இவர், அம்மாவட்டத்தில் பாஜக துணைத்தலைவராக உள்ளார்.
கோவை மக்களவை தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால், பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வந்தனர். அந்தவகையில், கடந்த சில நாட்களாக கோவையில் துரை ராமலிங்கம் தங்கி பரப்புரை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் திடீரென தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து தனது இடது கை ஆட்காட்டி விரலை ராமலிங்கம் துண்டித்துக் கொண்டார். அவர், அப்போது அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று முழக்கமிட்டவாறே துண்டித்தார்.
இதனை பார்த்த சக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு கை விரலில் ரத்தம் வழிந்தோடியதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு விரல் இணைக்கப்பட்டது.
இதே போல கர்நாடகாவைச் சேர்ந்த அருண் வார்னகேர் என்பவர் மோடி மீண்டும் முறையும் பிரதரமராக வேண்டும் என்று தனது இடது கை ஆள்காட்டி விரலை வெட்டி காளிக்கு பலி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |