தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் மூன்று பேர் கைது- அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் மதுரையில் பாஜக மூன்று நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டிருந்த பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது 153 (A), 505 (1) (B), 504, 505(1) (C), 66 (D) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலிசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் இல்லத்தில் ஆஜர்படுத்திய போது, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து எஸ்ஜி சூர்யா மத்திய சிறையில் அடைக்கப்பட்டதற்கு பாஜவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பு மதுரையில் பாஜக நிர்வாகிகள் மூன்று பேரை போலீஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
மதுரை பாஜக கிழக்கு மண்டல செயலாளரான மேலபனங்காடியைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் ( 37), 28-வது வார்டு பட்டியல் அணி மண்டல தலைவரான செல்லூரைச் சேர்ந்த மலைச்சாமி (23), பாஜக பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினரான கோசாகுளத்தைச் சேர்ந்த வைரமுத்து (38) ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இவர்கள் மூவரும் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.