அவுஸ்திரேலிய வீராங்கனைகள் மீதும் தவறு - துஷ்பிரயோக சம்பவம் குறித்த அமைச்சர் சர்ச்சை பேச்சு
துஷ்பிரயோக சம்பவத்தில் அவுஸ்திரேலிய வீராங்கனைகள் மீதும் தவறு உள்ளதாக அமைச்சர் பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு தொல்லை
2025 மகளிர் உலக கோப்பை தொடரில் விளையாட இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி, மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் உள்ள ரேடிசன் ஹொட்டலில் தங்கியுள்ளனர்.

2 அவுஸ்திரேலிய வீராங்கனைகள் வெளியே சென்று விட்டு ஹொட்டலுக்கு திரும்பும் போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் அவர்களை தகாத முறையில் தொட்டு சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சீண்டலில் ஈடுபட்ட அகீல் கான் என்ற நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா வருத்தம் தெரிவித்துள்ளார்.
வீராங்கனைகள் பக்கமும் தவறு
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு வீராங்கனைகள் பக்கமும் தவறு உள்ளது என மத்தியபிரதேச பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வு குறித்து பேசிய அவர், "ஒரு தவறு நடந்துள்ளது. வீராங்கனைகள் யாரிடமும் சொல்லாமல் சென்று விட்டார்கள். அவர்களின் தலைமை பயிற்சியாளர்களிடம் கூட சொல்லவில்லை.

இது அவர்களின் பக்கம் உள்ள தவறு. தனிப்பட்ட பாதுகாப்பும், காவல்துறையினரின் பாதுகாப்பு இருந்தும், அவர்கள் கவனிக்காத நேரத்தில் இவர்கள் சென்றுவிட்டார்கள். இந்த சம்பவம் நடந்து விட்டது. இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம்.
வீராங்கனைகள் இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் வேறு நாடு அல்லது நகரங்களுக்கு செல்லும் போது, நமது சொந்த பாதுகாப்பை பற்றியும் கவலைப்பட என நினைக்கிறேன்.
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் மீது மிகப்பெரிய மோகம் இருப்பதால், வீரர்கள் தங்கள் இடத்தை விட்டு வெளியேறும்போது, அவர்களின் பாதுகாவலர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என கூறினார்.
இந்த விவகாரத்தை குறிப்பிட்டு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் பாஜக அரசு மீது குற்றஞ்சாட்டி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |