தேர்தல் பத்திரம் மூலம் ரூ.10,122 கோடி நன்கொடை பெற்று பாஜக முதலிடம்.., இதன் முழு பின்னணி என்ன?
தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்ற கட்சிகளில் ரூ.10,122 கோடி பெற்று பாஜக முதலிடத்தில் உள்ளது.
தேர்தல் பத்திரம் ரத்து
தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்றும், வங்கிகள் அவற்றை விற்பனை செய்ய தடை விதிப்பதாகவும் உச்சநீதிமன்றம் இன்று (பிப் -15) தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பத்திரம் முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும், நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அதாவது, தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் தேர்தல் பத்திரம் முறை உள்ளது. முக்கியமாக தேர்தல் பத்திரம் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடைகள் அளிக்கும் போது அதற்கு கைமாறை எதிர்ப்பார்க்க வாய்ப்புள்ளது.
இதனால், தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்தச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்தச் சட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. மேலும், தேர்தல் பத்திரம் சட்டம் ரத்து செய்வதோடு , கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது.
நன்கொடையில் பாஜக முதலிடம்
இந்நிலையில், 2016 முதல் 2022 வரை தேர்தல் பத்திரம் மூலம் ரூ.16,000 கோடியை அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது மொத்தம் 8 ஆயிரத்து 30 தேர்தல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.10,122 கோடியை பெற்று பாஜக முதலிடத்திலும், ரூ.1,547 கோடியை பெற்று காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
மேலும், ரூ.823 கோடியை பெற்று திரிணமூல் காங்கிரஸ் மூன்றாம் இடத்திலும், ரூ.367 கோடியை பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நான்காம் இடத்திலும், ரூ.231 கோடியை பெற்று தேசியவாத காங்கிரஸ் ஐந்தாம் இடத்திலும், ரூ.85 கோடியை பெற்று பகுஜன் சமாஜ் கட்சி ஆறாம் இடத்திலும், ரூ.13 கோடியை பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏழாம் இடத்திலும் உள்ளன.
பின்னணி விவகாரம்
கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டு, 2018 -ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதன்படி, ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்படும்.
அதாவது, குறிப்பிட்ட வங்கி கிளைகளில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, ஓக்டோபர் மாதங்களில் தேர்தல் பத்திரம் விற்பனை செய்யப்படும். பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கும், தேர்தல் சமயங்களில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்களுக்கும் விற்பனை செய்யப்படும்.
இதனை, தனிநபர்கள், நிறுவனங்கள் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். அதனை 15 நாட்களுக்குள் பணமாக மாற்ற வேண்டும். இல்லையென்றால் அந்த பணம் பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும்.
இந்த தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. பின்னர், இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |