மாடர்னா தடுப்பூசி போத்தல்களில் மர்ம துகள்... இருவர் மரணம்: அதிரடி முடிவெடுத்த நாடு
ஜப்பானின் ஒகினாவா நகரில் மாடர்னா தடுப்பூசி போத்தல்களில் மர்ம துகள்கள் கண்டறியப்பட்ட நிலையில், தடுப்பூசி அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தை அடுத்து 1.6 மில்லியன் மாடர்னா தடுப்பூசி டோஸ்களை ஜப்பான் திரும்ப பெற்றுள்ளது. கருப்பு மற்றும் பிங்க் நிற மர்ம துகள்கள் மாடர்னா தடுப்பூசி போத்தல்கள் மற்றும் ஊசிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மர்ம துகள்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஒகினாவா நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மாடர்னா தடுப்பூசிகளின் பயன்பாட்டை நிறுத்துவதாகக் கூறியது. இந்த விவகாரம் தொடர்பில் உள்ளூர் மாடர்னா தடுப்பூசிகளின் விநியோகஸ்தர் Takeda Pharmaceutical விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் 863 தடுப்பூசி மையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட 1.6 மில்லியனுக்கும் அதிகமான மாடர்னா டோஸின் பயன்பாட்டை ஜப்பான் நிறுத்திய மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த கண்டுபிடிப்பு வெளிவந்துள்ளது.
சில போத்தல்களில் மர்ம துகள்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி டோஸ்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இன்னும் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வார தொடக்கத்தில் திரும்பப் பெறப்பட்ட தடுப்பூசி குப்பிகளில் இருந்து இரண்டாவது மாடர்னா டோஸ் பெற்ற இரண்டு பேர் இறந்துவிட்டதாக ஜப்பானின் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை வெளிப்படுத்தியது.
30 வயது கடந்த இருவரும் இறந்ததன் காரணம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், திரும்பப் பெறப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் அனைத்தும் ஸ்பெயின் நாட்டில் தயாரிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் ஆய்வக பகுப்பாய்விற்கு உட்பட்டுள்ளனர். முடிவுகள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.