மின்தடையால் மொத்தமாக ஸ்தம்பித்த ஐரோப்பிய நாடுகள்... பல நாட்கள் நீடிக்கும் என அச்சம்
ஐரோப்பாவில் முக்கியமான சில நாடுகளில் திடீரென்று மின்தடை ஏற்பட்டு மொத்தமாக ஸ்தம்பித்துள்ள நிலையில், சகஜ நிலைக்கு திரும்ப இன்னும் சில நாட்களாகலாம் என்ற தகவல் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நிச்சயமற்ற தன்மை
இதனால், ஸ்பெயின், போர்த்துகள் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் அவசர அவசரமாக உணவுப் பொருட்களை வாங்கிக் குவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடைகள் மற்றும் வங்கிகளுக்கு வெளியே மக்கள் கூட்டம் காணப்படுவதுடன்,
நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைக்கவும், தங்களால் இயன்ற அளவு பணத்தை எடுக்கவும் தீவிரமாக முயன்றுள்ளனர்.
மக்கள் தங்கள் வாகனங்களையும் எரிபொருள் கேன்களையும் நிரப்ப பெட்ரோல் நிலையங்களில் கார்களுடன் திரண்டுள்ளனர். விமான நிலையங்களும் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளன, விமானங்கள் தாமதமாகவும் ரத்து செய்யப்பட்டும் உள்ளன.
இதனிடையே, போர்த்துகள் நாட்டில் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரையில் TAP Air விமான சேவைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பேரிடர் ஏற்பட்டுள்ளதால், நகர மக்கள் தாங்கள் இருந்த இடத்திலேயே இருக்குமாறு மாட்ரிட் மேயர் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் நகரத்தின் பிராந்திய அரசாங்கத்தின் தலைவர், ஸ்பெயினின் பிரதமரிடம் இராணுவத்தை களமிறக்க அனுமதிக்கும் அவசரத் திட்டத்தை செயல்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.
6 முதல் 10 மணிநேரம்
உள்ளூர் நேரப்படி மதியம் 12.30 மணியளவில் ஸ்பெயினில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மில்லியன் கணக்கான மக்கள் இருளில் மூழ்கினர். ஸ்பெயினின் அணு மின் நிலையங்கள் தானாகவே நின்று போயின, ஆனால் அவற்றை பாதுகாப்பான நிலையில் வைத்திருக்க டீசல் ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டன.
இரு நாடுகளிலும் ரயில்கள் மற்றும் மெட்ரோ சேவைகள் ஸ்தம்பித்தன, மக்கள் சுரங்கப்பாதைகளிலும் ரயில் பாதைகளிலும் சிக்கிக்கொண்டனர். கடுமையான வெப்பம் காரணமாக மின்தடை ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
இதனை induced atmospheric variation என்றும் அடையாளப்படுத்தியுள்ளனர். 6 முதல் 10 மணி நேரம் வரையில் பழுது நீக்கும் நடவடிக்கைகள் நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, ஸ்பெயின் அதிகாரிகள் மின் தடைக்கான காரணத்தை அவசரமாக விசாரித்து வருகின்றனர், மேலும் சைபர் தாக்குதலால் மின்தடை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |