காபூலில் வெளிநாட்டு தூதரகத்தை தகர்க்க திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள்... அதில் 14 பேர் ஆசிய நாட்டவர்களா?
காபூலில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னர் வெளிநாட்டு தூதரகம் ஒன்றை குண்டுவைத்து தகர்க்க ஐஎஸ் தீவிரவாதிகள் முயன்றுள்ள நிலையில் அதனை தாலிபான்கள் தடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தாக்குதலில் ஈடுபட்ட கோராசன் ஐ.எஸ் தீவிரவாதிகளில் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 14 பேர்கள் இடம்பெற்றிருந்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் கடந்த 2014ல் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தீவிரமாக செயல்பட்டபோது இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம், காசர்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் இங்கிருந்து தப்பி ஐஎஸ் அமைப்பில் இணைந்தனர்.
ஐ.எஸ் அமைப்பு முற்றாக சிதறடிக்கப்பட்ட பின்னர், இதில் சிலர் ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் ஐ.எஸ் கோராசன் அமைப்பில் இணைந்தனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்களிடம் இருந்து அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் மீட்ட பிறகு அங்கிருந்த ஐ.எஸ் கோராசன் தீவிரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் வந்த பிறகு பாக்ராம் சிறையில் இருந்தவர்கள் தாலிபான்களால் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் குறைந்தது 14 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் காபூல் விமான நிலையம் அருகே நடந்த இரட்டை தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 13 அமெரிக்க ராணுவத்தினர் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 143 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஐ.எஸ்-கோராசன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. காபூல் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஆகத்து 26ம் திகதி காபூலில் உள்ள துர்க்மெனிஸ்தான் தூதரகத்தை குண்டு வைத்து தகர்க்க ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகள் முயன்றுள்ளனர்.
ஆனால் அந்த அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருவரை தாலிபான்கள் மடக்கி பிடித்துள்ளனர். இதனால் குண்டுவெடிப்பு சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர்களும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த 14 பேரில் 13 பேர் காபூலில் இருந்து தப்பித்து மீண்டும் கோராசன் மாகாணத்துக்கு சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.