குழாயை திறந்தவுடன் கொட்டிய ரத்தம்.. அலறியடித்து ஓடிய மக்கள்!
தமிழகத்தின் திருப்பத்தூரில் தண்ணீர் குழாயை திறந்தபோது ரத்தம் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் நகராட்சி 25வது வார்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில், காலையில் தண்ணீர் குழாயை திறந்தபோது ரத்தம் கொட்டியுள்ளது. முதலில் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சாயம் கலந்து வருவதாக நினைத்துள்ளனர். ஆனால் அதனுடன் ரத்த வாடையும் சேர்ந்து வந்ததால் பதறி போன மக்கள் உடனடியாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டிருப்பதை கண்டனர். அதனை சரி செய்ய முயன்றபோது உண்மையிலேயே குழாயில் வந்தது ரத்தம் தான் என தெரிந்தது.
ஆனால் அது ஆட்டின் ரத்தம் என்றும், அப்பகுதிகளில் உள்ள மாட்டிறைச்சி கடைகளில் இருந்து வெளியேறியதும் பின்னர் தெரிய வந்தது. மாட்டிறைச்சி கழிவுகள் ஏராளமாக தேங்கி குடிநீர் குழாய் வழியாக ஊடுருவி விட்டது. அதனால் தான் கழிவுகளுடன் ரத்தம் கலந்து வந்திருப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பொதுமக்கள் பாதாள சாக்கடை அடைப்பை தற்காலிகமாக சீரமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.