500 கடந்த கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை... தெருக்களில் சடலங்கள்: பற்றியெரியும் ஈரான்
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 500 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தெருவோரம் குவிக்கப்பட்டுள்ள
டிசம்பர் 28 ஆம் திகதி தொடங்கி, ஈரானில் மொத்த மாகாணங்களிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கடவுக்கு எதிரானவர்கள் எனவும், அவர்கள் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள் எனவும் ஈரான் அரசாங்கம் அறிவித்தது.
மேலும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க இராணுவம் களமிறங்கியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், தற்போது கொல்லப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை 500 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கசிந்துள்ள காணொளி ஒன்றில், தெருவோரம் குவிக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு அருகே உறவினர்கள் கண்ணீருடன் காணப்படுகின்றனர்.
சுமார் 180 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. தெஹ்ரானின் தெற்கில் உள்ள கஹ்ரிசாக் தடயவியல் மருத்துவ மையத்திற்கு வெளியே இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அடையாளம் காணல், தடயவியல் பரிசோதனை மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதற்காக சடலங்கள் இங்கே அனுப்பி வைக்கப்படும்.

மத்திய கிழக்கு நாடான ஈரானில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களை மிருகத்தனமாக அடக்கியதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது 538 பேர் என்று ஆர்வலர்கள் தற்போது கூறுகின்றனர்.
மட்டுமின்றி, அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனமும், 10,600 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
ஈரானில் விலைவாசி உயர்விற்கு எதிராக டிசம்பர் 28 அன்று தொடங்கிய போராட்டங்கள், இஸ்லாமிய மத அடிப்படைவாத ஆட்சிக்கு மிக முக்கியமான சவாலாக மாறி வருகின்றன.
வலுவான நடவடிக்கை
இந்த நிலையில், ஈரான் நிர்வாகம் வரம்புகளை மீறி வருவதாகவும், கடுமையான வழிகளை அமெரிக்கா தெரிவு செய்யும் நிலை வரும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், அமெரிக்கா ஈரானை தாக்கினால், அமெரிக்க இராணுவ முகாம்களும் இஸ்ரேலும் உறுதியான இலக்குகளாக' இருக்கும் என்று ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஈரான் எச்சரித்துள்ளது.

இதனிடையே, ஈரானுக்கு எதிராக தானும் தனது குழுவினரும் சில வலுவான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாக ஜனாதிபதி ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.
மட்டுமின்றி, ஜனாதிபதி ட்ரம்புடன் விளையாடாதீர்கள். அவர் ஏதாவது செய்வேன் என்று சொன்னால், அவர் அதை செய்து முடிப்பார் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் சமீபத்திய சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |