துப்பாக்கி குண்டு காயங்களுடன் புலம்பெயர் மக்களின் சடலங்கள்... ஐ. நா அமைப்பு தகவல்
லிபியாவில் சமீபத்திய நாட்களில் இரண்டு இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் உடல்களில் சில துப்பாக்கிச் சூட்டுக் காயங்களைக் கொண்டிருந்தன என ஐ. நா அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்னும் அதிகமாக
கிட்டத்தட்ட 50 உடல்கள் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் அதிகமாகக் கண்டுபிடிக்கப்படலாம் என அதிகாரிகள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை, ஒரு பெரிய கல்லறையில் இருந்து 19 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது கல்லறையில் இருந்து குறைந்தது 28 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இரண்டு கல்லறைகளும் லிபியாவின் தென்கிழக்கி குஃப்ரா பகுதியில் அமைந்துள்ளது. இந்த இரண்டு கல்லறைகளில் இருந்தும் மீட்கப்பட்ட உடல்களில் சில துப்பாக்கி குண்டு காயங்களுடன் காணப்பட்டதாக ஐ.நா அமைப்பான IOM தெரிவித்துள்ளது.
மேலும், லிபியாவில் இருந்து புலம்பெயர மக்களுக்கு உதவும் Al Abreen அமைப்பும் இறந்தவர்களில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது என தெரிவித்துள்ளது.
ஞாயிறன்று கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கல்லறையில் சுமார் 70 பேர்கள் வரையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு முக்கிய பகுதியாக
இறந்தவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. பொலிஸ் நடவடிக்கையின் போது இரண்டு கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கட்டாய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 70 புலம்பெயர் மக்கள் விடுக்கப்பட்டனர்.
லிபியாவில் இதுபோன்ற கல்லறைகள் கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு லிபியாவின் ஷுயாய்ரிஃப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை ஒன்றில் இருந்து 65 புலம்பெயர் மக்களின் சடலம் மீட்கப்பட்டது.
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பாவிற்குச் செல்ல முயற்சிக்கும் புலம்பெயர் மக்களுக்கான பாதையில் லிபியா ஒரு முக்கிய பகுதியாக மாறியுள்ளது.
கடந்த 2011ல் நேட்டோ படைகளால் லிபியாவின் முயம்மர் கடாபி பதவி நீக்கம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், லிபியா தொடர்ந்து அழிவுப்பாதை நோக்கியே நகர்ந்துள்ளது.
எண்ணெய் வளம் மிக்க லிபியா கடந்த பத்தாண்டுகளில் பெரும்பாலான காலம் அதன் கிழக்கு மற்றும் மேற்கில் போட்டி அரசாங்கங்களால் ஆளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |