ஆளில்லாத வீட்டில் சிறுமியின் சடலம்... காதலருடன் மாயமான தாயார்: விசாரணையில் அம்பலமான பகீர் பின்னணி
தென் கொரியாவில் ஆளில்லாத வீட்டில் இருந்து 3 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், தாயாரையும் சகோதரியையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
தென் கொரியாவின் குமி நகரத்திலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணையை முன்னெடுத்த பொலிசார் அதிர்ச்சி பின்னணியை வெளியிட்டுள்ளனர்.
ஆளில்லாத வீடு ஒன்றில் இருந்து பிப்ரவரி 10ம் திகதி 3 வயது சிறுமியின் உடலின் மிச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ ஆய்வில், சிறுமி பட்டினியால் ஒரு 6 மாதத்திற்கு முன்னரே இறந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை பொலிசார் கண்டறிந்தனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சிறுமியின் தாயாரை பொலிசார் கைது செய்தனர்.
ஆனால் டி.என்.ஏ சோதனையில், அவர் தாயார் அல்ல மரணமடைந்த சிறுமியின் சகோதரி என தெரிய வந்தது.
மேலும், சிறுமியின் பாட்டி என அடையாளம் காணப்பட்ட 49 வயது Seok என்பரே உண்மையில் சிறுமியின் தாயார் என அதிகாரிகள் கண்டறிந்தனர்.
மட்டுமின்றி, குழந்தை பிறந்ததும் Seok தமது மூத்த மகள் கிம் மற்றும் அவரது கணவரிடம் குழந்தையை ஒப்படைத்து வளர்க்க பணிந்துள்ளார்.
இது இவ்வாறிருக்க குழந்தையின் உண்மையான தந்தை Seok-ன் தற்போதைய கணவர் அல்ல என்பதும் தெரிய வந்தது.
Seok குழந்தை பெற்றெடுத்த அதே காலகட்டத்தில் கிம்மும் ஒரு குழந்தைக்கு தாயானார். ஆனால் அந்த குழந்தை என்ன ஆனது என்பது தொடர்பில் தற்போது பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
மட்டுமின்றி கிம் தமது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இன்னொரு ஆணுடன் தலைமறைவாகியுள்ளார்.
மேலும் தாம் அதுவரை வளர்த்து வந்த தமது இளம் சகோதரியை கைவிட்டு சென்றுள்ளார்.
தற்போது கிம் மற்றும் அவரது தாயார் Seok ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
