ஆப்கானிஸ்தான் விவகாரம்: ஜி7 ஆலோசனை கூட்டம் எப்போது? போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 24-ஆம் திகதி ஜி-7 நாடுகளின் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 21 நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில், ஆப்கானிஸ்தானின் நிலையை உலக நாடுகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரம், கல்வி, வேலை உரிமைகள் குறித்து கவலையாக உள்ளது என்றும் தெரிவித்தன.
அதே சமயம் தாலிபான் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், பெண்கள் சுகாதாரத் துறையிலும், பிற துறைகளிலும் வேலை செய்யலாம் என்றும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கான உரிமைகளை வழங்க தலிபான் உறுதி பூண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய ஜி-7 நாடுகளின் மாநாடு இந்த வாரம் கூட்டப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
தற்போது போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஆகஸ்ட் 24-ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) ஜி-7 நாடுகளின் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
I will convene G7 leaders on Tuesday for urgent talks on the situation in Afghanistan. It is vital that the international community works together to ensure safe evacuations, prevent a humanitarian crisis and support the Afghan people to secure the gains of the last 20 years.
— Boris Johnson (@BorisJohnson) August 22, 2021
‘ஜி7 தலைவர்களுடன் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து அவசர ஆலோசனை நடத்துவதற்காக கூட்டத்தைக் கூட்ட உள்ளதாக போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்பான வெளியேற்றங்களை உறுதி செய்வதற்கும், மனிதாபிமான நெருக்கடியை தடுப்பதற்கும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்படுவது இன்றியமையாதது’ என்றும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.