பிரித்தானியாவில் புற்றுநோயையும் பூஞ்சைத் தொற்றையும் வென்ற சிறுவன்: அம்மா அப்பாவின் ஆசை
பிரித்தானியாவில், புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பூஞ்சைத் தொற்றுக்கும் ஆளாகி, மீண்டும் நடமாடுவானா என பெற்றோர் கவலைப்பட்ட சிறுவன் ஒருவன், தனது சகோதரியுடன் மீண்டும் பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டான்.
திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தை
2022ஆம் ஆண்டு, மே மாதம், Sabe (44) Dilly (43) தம்பதியரின் இரட்டைக் குழந்தைகளில் ஒரு பிள்ளையான நோவா கருணநாதன், திடீரென சாப்பிடுவதைக் குறைத்தான். அவன் தண்ணீர் அருந்துவதும் குறைந்ததை கவனித்துள்ளார்கள் அவனது பெற்றோர்.
அப்போது குழந்தைக்கு வயது இரண்டு. அதைத்தொடர்ந்து, அவனது கண்கள் மஞ்சள் நிறமாக மாற, சாப்பிடுவதையும் தண்ணீர் குடிப்பதையும் சுத்தமாக நிறுத்திவிட்டிருக்கிறான் நோவா.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நோவாவுக்கு அபூர்வ வகை இரத்தப்புற்றுநோய் ஒன்று தாக்கியுள்ளது என தெரியவரவே, பெற்றோர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.
அடுத்த அதிர்ச்சி
லண்டன் Great Ormond Street மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நோவாவுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் திடீரென குழந்தை அசாதாரணமாக நடந்துகொள்ள, குழந்தைக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அவனுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளார்கள்.
குழந்தையின் மூளையில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டதால் அவனுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, கீமோ சிகிச்சையை சற்று குறைத்துக்கொண்டு, பூஞ்சைத்தொற்றுக்கு சிகிச்சை துவங்கியுள்ளார்கள் மருத்துவர்கள்.
பள்ளிக்குச் செல்லத் தயார்
தற்போது நோவாவுக்கு நான்கு வயதாகிறது. புற்றுநோயும் பூஞ்சைத் தொற்றும் பாதித்தும், இரண்டு நோய்களையும் வென்று, தன் சகோதரி நைமாவுடன் பள்ளிக்குச் செல்லத் தயாராகிவிட்டான் நோவா.
பல மாதங்கள் கீமோதெரபி சிகிச்சையால் நோவாவின் புற்றுநோய் பாதிப்பு குணமாகிவிட்டது.
மீண்டும் சீருடை அணிந்து அவனும் அவன் சகோதரியும் பள்ளிக்குச் செல்வதைக் காண ஆவலுடன் இருப்பதாக தெரிவிக்கிறார்கள் நோவாவின் பெற்றோர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |