ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்கள்... உக்ரைனுக்கு உதவ பிரித்தானியாவின் அதிரடி திட்டம் அம்பலம்
ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களைக் கைப்பற்றி, அதில் இருந்து ஈட்டப்படும் பல மில்லியன் பவுண்டுகள் வருவாயை உக்ரைனுக்கு அளிக்க பிரித்தானியா திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.
உக்ரைனுக்கு வழங்கப்படும்
ஸ்டார்மர் அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ரஷ்யாவின் கடத்தல் எண்ணெய் கப்பல்கள் ஒவ்வொன்றும் பல மில்லியன் பவுண்டுகளை ஈட்டித் தரும் என்று அரசாங்கம் தரப்பில் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தொகை மொத்தம் ரஷ்யாவிற்கு எதிரான போரில் செலவிட உக்ரைனுக்கு வழங்கப்படும் என்றார். இந்த அதிரடித் திருப்பமானது வடக்கு ரஷ்யாவில் உள்ள முர்மாஸ்க் என்ற ஆர்க்டிக் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட Grinch என்ற எண்ணெய் கப்பலை பிரித்தானியா உதவியுடன் பிரான்ஸ் கடற்படை கைப்பற்றியதை அடுத்தே ஏற்பட்டுள்ளது.
அதாவது, இனி பிரித்தானியாவால் கைப்பற்றப்படும் ரஷ்ய கப்பல்களில் இருந்து எண்ணெய் விற்பனை செய்யப்படும். பிரித்தானியாவின் சிறப்புப் படைகள் ரஷ்யாவின் இரகசிய எண்ணெய் கப்பல்களைக் குறிவைத்து தயார் நிலையில் உள்ளதாகவும்; ஏற்கனவே 544 கப்பல்கள் மீது பிரித்தானியா தடைகளை விதித்துள்ளதாகவும் அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் இந்த அதிரடி முடிவு ரஷ்யாவின் இரகசிய எண்ணெய் ஏற்றுமதியில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றே பாதுகாப்பு அமைச்சகம் நம்புகிறது.
எண்ணெய் வருவாய் என்பது ரஷ்யப் பொருளாதாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். மேலும், மேற்கத்தியத் தடைகளைத் தவிர்ப்பதற்கும், புடினின் போர் முயற்சிகளுகு நிதியளிப்பதற்கும் ரஷ்யாவின் இந்த இரகசியக் கப்பல் படை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

போருக்கான காரணம்
ஆனால், பிரித்தானியா முன்னெடுக்கவிருக்கும் இந்த திட்டம் சவால் நிறைந்ததாகவே கூறப்படுகிறது. அதாவது, பிரித்தானியாவின் கொடியிடப்பட்ட எண்ணெய்க் கப்பல்களைக் கைப்பற்றுவதன் மூலமோ அல்லது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தனது பொருளாதார மற்றும் சட்டப் போரைத் தீவிரப்படுத்துவதன் மூலமோ ரஷ்யா பதிலடி கொடுக்கக்கூடும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் நம்புகிறார்கள்.
உக்ரைனுக்கு நிதியளிக்க ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்துவது அப்பட்டமான திருட்டு என்றும், அது ஒரு சிறப்பு வகையான போருக்கான காரணம் என்றும் ரஷ்யா ஏற்கனவே வெளிப்படையாக எச்சரித்துள்ளது.

ஆனால், இந்த பறிமுதல் நடவடிக்கைகள் விகிதாசாரமானவை என்றும், சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட தடைகளுக்கு உட்பட்டவை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் கணக்கிட்டுள்ளது.
பிரித்தானியாவின் இந்த நகர்வானது ஏற்கனவே, ஈரான் தொடர்பிலான எண்ணெய் கப்பல்களைக் கைப்பற்றி, நீதிமன்றத்தின் ஒப்புதலின் கீழ் எண்ணெயை விற்பனை செய்து வரும் அமெரிக்காவின் நடவடிக்கை போன்றதாகும்.
இப்படியான நடவடிக்கைகளால் ஈரானுக்கான 294 மில்லியன் டொலர் வருவாயை முடக்கியதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |