மலாவியில் கடத்தப்பட்ட பிரித்தானிய பெண்: பரிசுத் தொகையை அறிவித்த பொலிஸார்
British Auditor Abducted Malawi Police offer Cash Reward: மலாவி நாட்டில் பிரித்தானிய பெண் ஒருவர் பகல் வேளையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தப்பட்ட பிரித்தானிய தணிக்கையாளர்
மலாவி(Malawi) நாட்டின் பிளான்டைர்(Blantyre) நகரில் பட்டப்பகலில் 47 வயது பிரித்தானிய பெண் கடத்தப்பட்டதை அடுத்து தீவிர தேடுதல் வேட்டையை அந்நாட்டு காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆடிட் கன்சல்ட் லிமிடெட் நிறுவனத்தில் தணிக்கையாளராக பணிபுரியும் நுஸ்ரத் உஸ்மான்(Nusrat Osman) என்ற பிரித்தானியா பெண்ணே இந்த கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
மவுண்ட் ப்ளீசண்ட் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இருந்து நுஸ்ரத் உஸ்மான் வெள்ளிக்கிழமை 12.30 மணிக்கு அடையாளம் தெரியாத 4 சந்தேக நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

கடத்தல்காரர்கள் சாம்பல் நிற நிசான் டூலிஸ் காரை பயன்படுத்தி தப்பிச் சென்று இருக்கலாம் என்று பொலிஸார் நம்புகின்றனர்.
பரிசுத் தொகையை அறிவித்த பொலிஸார்
நுஸ்ரத் உஸ்மானை விரைவாக மீட்டெடுக்க எண்ணி, கடத்தல் மற்றும் நுஸ்ரத் உஸ்மான் குறித்த துப்பு கொடுப்பவர்களுக்கு 30 மில்லியன் மலாவி கவாச்ச(சுமார் £12,800) பரிசு தொகையாக வழங்கப்படும் என்று மலாவி காவல்துறை அறிவித்துள்ளது.
காவல்துறையினர் உள்ளூர் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக குறுஞ்செய்திகளை அனுப்பி தீவிர தேடுதல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், தற்போதைய மீட்பு நடவடிக்கையை பாதிக்கும் வகையில் சரிபார்க்கப் படாத எந்தவொரு வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உஸ்மான் கடத்தப்பட்டதை உறுதிப்படுத்திய அவரது குடும்பம், உஸ்மான் அமைதியான முறையில் தணிக்கையாளராக பணியாற்றி வந்ததாகவும், அவருக்கு யாருடனும் எந்தவொரு தனிப்பட்ட விரோதங்களும் இல்லை என்று அவரது கணவர் தெரிவித்துள்ளார்.