11 ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்தில் ஆஜரான எருமை மாடு! சுவாரஸ்ய சம்பவம்
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் திருட்டு வழக்கு ஒன்றில் எருமை மாடு ஆஜரான சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருடு போன எருமை மாடுகள்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே பிஷன்புரா சரண்வாஸ் ஹால், ஹர்மதா பகுதியை சேர்ந்த விவசாயி சரண்சிங் செராவத் (48). இவர், எருமை மாடுகள் வளர்த்து வருகிறார்.
கடந்த 2012 ஆம் ஆண்டில் இவர் வளர்த்த 3 எருமை மாடுகள் காணாமல் போனதால் ஹர்மதா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பின்பு, இரண்டு எருமை மாடுகளை சரண்சிங் செராவத்திடம் பொலிசார் ஒப்படைத்தனர். அதில், ஒரு எருமை மாடு சில நாள்களில் இறந்து விட்டது.
இந்த திருட்டு வழக்கில் அஷ்ரத் என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
எருமை மாடு நீதிமன்றத்தில் ஆஜர்
இதனிடையே இந்த வழக்கு சுமார் 11 ஆண்டுகளாக சவுமு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், எருமை மாட்டின் உரிமையாளரான விவசாயி சரண்சிங் செராவத் உள்பட 21 பேரை சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 5 பேரின் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.
மேலும், இந்த வழக்கில் எருமை மாட்டை ஆஜர்படுத்துமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. பின்பு, சரண்சிங் செராவத் எருமை மாட்டை வாகனத்தில் ஏற்றி நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு, எருமை மாடு ஆஜர்படுத்தப்பட்டு சாட்சியால் அடையாளம் காணப்பட்ட பின்பு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கானது செப்டம்பர் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |