பிரியாணியால் தற்கொலை முடிவை கைவிட்ட பிஸ்னஸ்மேன்.., அப்படி என்ன நடந்தது?
மகளை சாலையில் நிற்க வைத்துவிட்டு மேம்பாலத்தின் மீது ஏறி நின்று குதிக்க முயன்ற பிஸ்னஸ்மேன் ஒருவர் பிரியாணியால் தனது முடிவை கைவிட்டார்.
பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற வியாபாரி
இந்திய மாநிலமான மேற்கு வங்கம், கொல்கத்தாவை சேர்ந்த 45 வயது டைல்ஸ் வியாபாரி ஒருவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இரண்டாவது மகளும், அவரது மனைவியும் பிரிந்து சென்றனர். தற்போது, முதல் மகளுடன் தான் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், மனைவி பிரிந்த சோகத்தால் டைல்ஸ் வியாபாரி தற்கொலை செய்ய முடிவு செய்து, நேற்று தனது மகளை பைக்கில் அழைத்துக் கொண்டு கொல்கத்தா சயின்ஸ் சிட்டிக்கு சென்றார்.
அப்போது மகளை ரோட்டில் நிற்க வைத்துவிட்டு மேம்பாலத்தின் மீது ஏறி கீழே குதிக்க முயன்றுள்ளார். அதனை பார்த்தவர்கள் கூச்சலிட்டு கீழே இறங்கும்படி கூறினர். ஆனால், அவர் சமாதானம் ஆகவில்லை.
பிரியாணியால் கைவிடப்பட்ட முடிவு
பின்னர், தகவலறிந்து வந்த பொலிஸார் வியாபாரியை கீழே இறங்குபடி நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர் யார் கூறும் பேச்சையும் கேட்கவில்லை.
அந்த நேரத்தில் தான் பொலிஸாருக்கு ஒரு ஐடியா வந்தது. கொல்கத்தா சயின்ஸ் சிட்டி நகரில் பிரபல ஹொட்டலில் ருசியான பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது. தற்கொலை முடிவை கைவிட்டால் அந்த பிரியாணியை வாங்கி தருவதாக பொலிஸார் கூறினர்.
Istock
உடனே, அந்த வியாபாரி தற்கொலை முடிவை கைவிட்டார். பின்னர், கீழே இறங்கி வந்து வாங்கி கொடுத்த பிரியாணியை சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |