வங்கி கணக்கில் தவறுதலாக விழுந்த ரூ.15 லட்சம்! 6 மாதத்திற்கு பிறகு விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி
இந்தியாவில் விவசாயி ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக சுமார் ரூ.15 லட்சம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் கியானேஷ்வர் ஒடே என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு இவரின் வங்கிக் கணக்கில் 15.34 லட்சம் ரூபாய் தவறுதலாக டிபாசிட் ஆகியுள்ளது.
இந்நிலையில் தனது கணக்கில் டிபாசிட் ஆன பணம் குறித்து கியானேஷ்வர் வங்கியிடம் தெரிவிக்கவில்லை. அதேபோல வங்கியிலிருந்தும் யாரும் அவரை தொடர்பு கொண்டு கேட்கவில்லை.
2014ஆம் ஆண்டு மக்களின் வங்கிக் கணக்கில், 15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதி கியானேஷ்வரின் நினைவுக்கு வந்தது. அதன்படி இந்த பணம் டிபாசிட் செய்யப்பட்டிருப்பதாக அவர் எண்ணினார்.
பின்னர் அவர் அந்த பணத்தில் 9 லட்சத்தை எடுத்து கொண்டு புதிதாக ஒரு வீட்டை கட்டியுள்ளார்.
சமீபத்தில் இதுகுறித்து வங்கிக்கு தெரியவந்ததும் அந்த கணக்கில் மீதமிருந்த 6 லட்சம் ரூபாய் பணத்தை திரும்பப் பெற்றுள்ளதையடுத்து கியானேஷ்வர் செலவழித்த 9 லட்சம் ரூபாயை திரும்பப்பெறும் முயற்சிகளில் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.