புடின் - ட்ரம்ப் புடாபெஸ்ட் சந்திப்பிற்கு எழுந்த பெரும் சவால்: ரஷ்ய விமானங்கள் பறக்க தடை
ரஷ்யாவின் விளாடிமிர் புடின் அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்திக்க புடாபெஸ்ட் செல்கிறார் என்றால், முதலில் அவர் சில தடைகளைத் தாண்ட வேண்டும்.
பறக்க தடை
ஆகஸ்ட் மாதம் புடின் தனது ஆங்கரேஜ் உச்சிமாநாட்டிற்காக அலாஸ்காவுக்குச் சென்றபோது, அவரது விமானத்திற்கு அமெரிக்கா சிறப்பு அனுமதி வழங்கியது. உக்ரைன் போருக்கு பின்னர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வான்பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே புடின் புடாபெஸ்டுக்கு பயணப்பட வேண்டும் என்றால், அவருக்கு சிறப்பு அனுமதி தேவைப்படும். உக்ரைன் போர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் சந்திப்பு என்பதால், அவருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும்.
ஆனால் ஹங்கேரி ஒரு ரஷ்ய ஜனாதிபதி பயணப்படுவதற்கு எளிதான இடமல்ல. வெளிநாடுகளுக்கு அரிதாக செல்லும் புடின், பல வருடங்களாக ஐரோப்பிய நாடுகளுக்கே சென்றதில்லை.
இப்படியான ஒரு நெருக்கடியான சூழலில் இரு தலைவர்களும் சந்திக்க உள்ளனர். 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த அடுத்த நாள் ஐரோப்பிய ஒன்றியம் விளாடிமிர் புடின் மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரின் சொத்துக்களை முடக்கியது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் வான்வெளியில் பறக்கும் அனைத்து ரஷ்ய விமானங்களுக்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டது. ட்ரம்ப் தெரிவு செய்துள்ள ஹங்கேரியும் அதன் பல அண்டை நாடுகளும் நேட்டோ உறுப்பு நாடுகளாகும்.
மிகப்பெரிய சிக்கல்
உக்ரைன் சிறார்களை சட்டவிரோதமாக நாடு கடத்துதல் மற்றும் இடமாற்றம் செய்த விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் புடினை குற்றம் சாட்டியுள்ளது. புடின் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் இருப்பினும் அவை அனைத்தையும் தீர்த்து வைக்க முடியும் என்று ஹங்கேரி நம்புகிறது.
ஆனால் விளாடிமிர் புடின் மாஸ்கோவிலிருந்து புடாபெஸ்டுக்கு எவ்வாறு பயணப்படுவார் என்பதுதான் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. அவர் பெல்கிரேடுக்கு ஏர் செர்பியா விமானத்தில் சென்று, அங்கிருந்து ஹங்கேரிக்கு ரயிலில் பயணிக்கப் போவதில்லை என்பது தெளிவாகிறது.
ஒருவேளை மிகவும் நேரடியான பாதையாக, கருங்கடல் மற்றும் துருக்கியின் கிழக்கு கடற்கரை வழியாக, பல்கேரியா மற்றும் செர்பியா அல்லது ருமேனியா வழியாக ஹங்கேரிக்கு அவர் செல்லலாம். ஆனால் புடின் விவகாரத்தில் புடாபெஸ்ட் சரியான தெரிவல்ல என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |