மீண்டும் ட்ரூடோ மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு: கனேடிய மக்கள் கோபம்
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோனை தொடர்ந்து கனடாவின் ஆளுநர் என அவமதித்துவரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், மீண்டும் அவரை ஆளுநர் ட்ரூடோ என அழைத்துள்ளதுடன், அவர் மீது குற்றச்சாட்டு ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
ட்ரூடோ மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
தனது சமூக ஊடகப்பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ட்ரம்ப், மீண்டும் கனடா பிரதமரை கனடாவின் ஆளுநர் ட்ரூடோ என அழைத்துள்ளதுடன், அவர் மீது குற்றச்சாட்டு ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
சமீபத்தில், கனடா ஆளுநருடன், தான் தொலைபேசியில் பேசியதாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், தனது வலுவற்ற எல்லைக் கொள்கைகளால் ட்ரூடோதான் இரு நாடுகளுக்கும் இடையில் பெருமளவில் பிரச்சினைகளை உருவாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், போதைப்பொருட்களையும், சட்டவிரோத ஏலியன்களையும் (புலம்பெயர்ந்தோரை ட்ரம்ப் தற்போது ஏலியன்கள் என குறிப்பிடத் துவங்கியுள்ளார்) அமெரிக்காவுக்குள் அனுமதிக்கக் காரணமாக அமைந்த கனடாவின் கொள்கைகள், பலர் உயிரிழக்கவும் காரணமாக அமைந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார் ட்ரம்ப்.
கனேடிய மக்கள் கோபம்
இதற்கிடையில், ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்குவதாக கூறிவரும் நிலையில், அவரது விமர்சனங்களை தான் சீரியஸாக எடுத்துக்கொள்வதாக கனேடிய வெளியுறவு அமைச்சரான மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.
இது விளையாட்டு அல்ல என்று கூறும் அவர், தாங்கள் அவமதிக்கப்படுவதாக கருதுவதாலேயே கனேடிய மக்கள் கோபமாக உள்ளதாகவும், விளையாட்டுப் போட்டிகளின்போது, அமெரிக்க தேசிய கீதம் ஒலிக்கும்போது சத்தமிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |