மணி நேரத்தில் தயார்... உக்ரைன் விவகாரத்தில் கனேடிய துருப்புகள் சூளுரை
ஐரோப்பிய நாடான லாத்வியாவில் இராணுவ பயிற்சி அளித்துவரும் கனேடிய துருப்புகள், தேவை எனில் மணி நேரத்தில் போருக்கு தயாராக முடியும் என தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர் அடுத்த கட்டத்தை எட்டும் நிலை ஏற்பட்டால் மணி நேரத்தில் பயிற்சியில் இருந்து போருக்கு தயாராக முடியும் என குழுவின் தளபதி கூறியுள்ளார்.
குட்டி நாடான லாத்வியா, ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. கடந்த 2017 முதல் 540 கனேடிய வீரர்கள் உட்பட 1,500 நேட்டோ இராணுவ வீரர்கள் லாத்வியாவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாடு ஒன்றில் அதிக எண்ணிக்கையிலான கனேடிய துருப்புகள் முகாம் அமைத்துள்ளது லாத்வியாவில் மட்டுமே என கூறப்படுகிறது. 2014ல் கிரிமியா பகுதியை வலுக்கட்டாயமாக ரஷ்யா தன்வசப்படுத்தியது முதல் லாத்வியா நிர்வாகமும் ரஷ்யாவின் படையெடுப்பு அச்சம் காரணமாக நேட்டோ உதவியை நாடி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறும் குழு தளபதி, ஐரோப்பா முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்த தேவை இல்லை என தெரிவித்துள்ளார்.
தற்காப்புக்கான பயிற்சிகள் மட்டுமே தற்போது லாத்வியாவில் முன்னெடுத்து வருவதாகவும், ஆனால் மணி நேரத்தில் போருக்கான தயார் நிலையை எட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்ய படையெடுப்பு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் லாத்வியாவில் கனேடிய துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.