நியூசிலாந்தில் இலங்கையர் தாக்குதலை நடத்த இதுதான் காரணம்: உண்மையை உடைத்த பிரதமர் ஜெசிந்தா
ஆக்லாந்தில் இலங்கையர் தாக்குதலை முன்னெடுக்க, நம்பமுடியாத ஏமாற்றமும் தடுமாற்றமுமே காரணமாக இருக்க முடியும் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
ஆக்லாந்து வணிக வளாகத்தினுள் புகுந்து தாக்குதலை முன்னெடுத்த இலங்கையரின் பெயர் அகமது ஆதில் முகமது என சனிக்கிழமை இரவு முதன்முறையாக அறிவிக்கப்பட்டது. அவர் இஸ்லாமிய தமிழர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
வணிக வளாகத்தில் கத்தியால் தாக்கி 7 பேர்களுக்கு காயத்தை ஏற்படுத்திய நிலையில் குறித்த நபர் பொலிசாரார் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் மூவர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
குறித்த இலங்கையரை நாடு கடத்துவது குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருந்தபோது, அவரை கைது செய்ய அதிகாரிகள் முயன்றனர், ஆனால் சட்டம் அவர்களை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்தது என பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த நபர் சமூகத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்து குறித்து அதிகாரிகள் தரப்பு கவலை கொண்டிருந்தனர் எனவும், அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என்றும், நாடு கடத்தப்படுவதை நிறுத்தும் தீர்ப்பாயம் மூலம் அவர் மேல்முறையீடு செய்வதற்கு சிறிது காலம் ஆகலாம் என்றும் அதிகாரிகளுக்குத் தெரியும் என்றும் பிரதமர் ஜெசிந்தா குறிப்பிட்டுள்ளார்.
அகதி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் ஏமாற்றம் காரணமாகவே அவர் தாக்குதலை முன்னெடுத்துள்ளார் என பிரதமர் ஜெசிந்தா முதன்முறையாக உண்மையை உடைத்து பேசியுள்ளார்.
32 வயதான அகமது ஆதில் முகமது கடந்த 2011ல் மாணவர்களுக்கான விசாவில் நியூசிலாந்து சென்றுள்ளார். அகதி அந்தஸ்துக்கான அவரது வேண்டுகோள் 2012ல் நிராகரிக்கப்பட்டது,
குடியுரிமை வழங்கும் நிர்வாகம் அவரது கோரிக்கையானது நம்பகத்தன்மை இல்லாதது என்று தீர்ப்பளித்தது. இருப்பினும், அடுத்த ஆண்டு குடிவரவு மற்றும் பாதுகாப்பு தீர்ப்பாயத்தில் அவர் வெற்றிகரமாக மேல்முறையீடு செய்து அகதி அந்தஸ்து பெற்றார்.
2016ல் இணையத்தில் வெளியிட்ட சில கருத்துகளால் அவர் நியூசிலாந்து பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தார். இது அவரின் அகதி அந்தஸ்து மோசடியாக பெறப்பட்டது என்று அதிகாரிகள் நம்புவதற்கு வழிவகுத்தது.
இதனையடுத்து அவரின் அகதி அந்தஸ்தை ரத்து செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதுடன், அவர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படலாம் என்ற நிலைக்கும் சென்றது.