பாகிஸ்தானில் மசூதிக்கு அருகே கார் குண்டுவெடிப்பு: 4 வயது குழந்தை உட்பட 21 பேர் உயிரிழப்பு
Car Bombing at Pakistan’s Kohat Mosque 21 dead: பாகிஸ்தானில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கார் குண்டுவெடிப்பு
வடமேற்கு பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை தொழுகையை குறிவைத்து மசூதி அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 21 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் 15 காவல்துறை அதிகாரிகளும், 4 வயது குழந்தையும் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோஹத் நகரில் இந்த கோர தாக்குதலானது அரங்கேறியுள்ளது.

கார் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் சேர்த்து, அதற்கு அருகில் அமைந்துள்ள காவல்துறை முகாம் மீது ஆயுதமேந்திய கும்பல் ஒன்று திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில், சம்பவ இடம் முழுவதும் இடுபாடுகளால் குழம்பி இருப்பதாகவும், காயமடைந்தவர்களுக்கு பொதுமக்கள் உதவுவதும் பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையில் சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.