நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்! நொடிப்பொழுதில் உயிர் பிழைத்த 6 பேர்
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், புதிதாக வாங்கிய கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கலின் நத்தம் அருகே மீனாட்சிபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராகேஷ்(வயது 24), ஊர்க்காவல் படை வீரரான ராகேஷ், அந்த ஊரில் உள்ள ஹொட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
அந்த ஹொட்டலின் உரிமையாளரான உபயதுல்லா, வாடகைக்கு காரை அனுப்பி வைக்கும் பணியையும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் டாக்டர் பாலாஜி என்பவர் குடும்பத்துடன் திருப்பதி செல்வதற்காக உபயதுல்லாவின் வாடகை காரை எடுத்துள்ளார்.
அந்த காரை ராகேஷ் ஓட்டி வந்துள்ளார், டாக்டர் பாலாஜி, அவரது பெற்றோர்கள், 4 மற்றும் 2 வயதுடைய குழந்தைகள் என அனைவரும் திருப்பதி சென்றுவிட்டு ஊர் திரும்பியுள்ளனர்.
இன்று அதிகாலை அவர்கள் திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த சிறுகனூர் அருகே சனமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது காரின் முன் பகுதியில் இருந்து அளவுக்கு அதிகமான புகை வந்தது. உடனே டிரைவரான ராகேஷ் திடீர் பிரேக் போட்டார்.
ஆனாலும் கார் நிற்காததால் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, காரின் கண்ணாடிகளை உடைத்து அனைவரையும் மீட்டுள்ளார்.
அத்துடன் சுமார் 10 மீட்டர் தூரத்துக்கு அப்பால் அழைத்தும் சென்றுள்ளார், உடனடியாக கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.
அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்ற போதும், பலமான காற்று அடித்ததால் மேலும் தீ பற்றி எரிந்தது.
உடனடியாக தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.