பாகிஸ்தானில் இலங்கையர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு: குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு
இலங்கையர் ஒருவர் பாகிஸ்தானில் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஆறு பாகிஸ்தானியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலுள்ள Sialkot நகரில், தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தவர், இலங்கையின் கணேமுல்லை பகுதியைச் சேர்ந்தவரான Priyantha Diyawadanage (48).
கடந்த டிசம்பர் மாதம், இலங்கையரான Diyawadanage மத தூஷணம் செய்ததாகக் கூறி, அவரை அடித்துக் கொன்று, தீவைத்து எரித்தது ஒரு கும்பல்.
இணையத்தில் Diyawadanage அடித்துக் கொல்லப்படும் காட்சிகளும், அவரது உடல் முன் பலர் செல்பி எடுக்கும் காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அந்த வழக்கு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது 88 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களில் ஆறு பேருக்கு மரண தண்டனையும், ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
Diyawadanage, முகமது நபியின் பெயர் கொண்ட போஸ்டர்களை கிழித்ததாகவும், அதனால் அவர் மத தூஷணம் செய்ததாகவும் வதந்திகள் பரவியதை தொடர்ந்து வன்முறை வெடித்தது.
ஆனால், Diyawadanageவைக் காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் ஒருவரோ, தான் பணியாற்றும் கட்டிடத்தை சுத்தம் செய்வதற்காகவே அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அவர் அகற்றியதாக உள்ளூர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.