வெளிநாட்டில் பூனையை காப்பாற்றிய இந்தியர் உட்பட நால்வர்: பெருந்தொகை பரிசளித்து பாராட்டிய பிரதமர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் சிக்கியிருந்த பூனையை காப்பாற்றிய இந்தியர் உட்பட நால்வருக்கு துபாய் பிரதமர் பரிசளித்து பாராட்டியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள கட்டிடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் கர்ப்பிணி பூனை ஒன்று சிக்கியிருந்துள்ளது. இதை கவனித்த இந்தியாவின் கேரள மாநிலத்தவர்களான இருவர் உட்பட நால்வர் குழு ஒன்று, பூனைக்கு காயமேற்படாமல் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட நிலையில், அது துபாய் பிரதமரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதியுமான முகமது பின் ரஷித் அல் மக்தூம் என்பவரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட, அதை அவர் பாராட்டியுள்ளதுடன், அந்த நால்வர் குழுவுக்கு நன்றி சொல்ல வேண்டும் எனவும், அதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தானியர் மற்றும் கேரள மாநிலத்தவர் உட்பட நால்வர் தொடர்பில் பிரதமருக்கு தகவல் தெரிவிக்கப்பட,
அந்த நால்வருக்கு தலா 50,000 திர்ஹாம் பரிசாக அறிவித்ததுடன், அவர்களின் இரக்க குணத்திற்கு பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, துபாய் பொலிசார் சம்பவப்பகுதிக்கு வந்து தகவல்கள் சேகரித்ததுடன், அந்த பூனையை மீட்டு சென்றுள்ளனர்.