காபூல் ஐ.எஸ் தீவிரவாத குழுவில் இந்த நாட்டவர்கள்... அம்பலப்படுத்திய தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் செயல்பட்டுவரும் ஐ.எஸ் தீவிரவாத குழுவைச் சேர்ந்த மலேசியர்கள் இருவரை கைது செய்துள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மக்களும், தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து ஆயிரக்கணக்கான அப்பாவி ஆப்கன் மக்களும் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
வெளிநாட்டு துருப்புகள் மற்றும் மக்கள் அனைவரும் வெளியேற ஆகத்து 31ம் திகதி கெடுவிதித்துள்ள தாலிபான்கள், அதன் பின்னர் புதிய அரசு அமையும் என அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நாட்டைவிட்டு வெளியேறும் நோக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் திரண்டுள்ளனர். குறிப்பிட்ட நாடுகள் தங்கள் ராணுவ சரக்கு விமானங்களில் மக்களை ஆப்கானிஸ்தாலில் இருந்து வெளியேற்றியும் வந்தனர்.
இதனிடையே, காபூல் விமான நிலையத்திற்கு வெளியே இரட்டை வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுத்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, அதற்கு பொறுப்பேற்றுக் கொண்டது. குறித்த தாக்குதலில் 13 அமெரிக்க துருப்பினர் உட்பட 200 பேர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
மேலும், வெடிகுண்டு தாக்குதல் நடந்த அதேவேளை துப்பாக்கிச் சூடு சம்பவமும் நடந்தேறியது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு ஐ.எஸ் குழுவினர்கள் என அடையாளம் காணப்பட்ட நான்கு ஆப்கன் நபர்களையும் 2 மலேசிய நாட்டவர்களையும் கைது செய்துள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
கைதான மலேசியர்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ள தாலிபான்கள்,
36 நேச நாடுகளின் துருப்புகளையே நாங்கள் வெற்றி கண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றி வருகிறோம், காபூலில் செயல்பட்டுவரும் ஐ.எஸ் அமைப்பினர்களை வெற்றிக்கொள்வது எங்களுக்கு கடினமான ஒன்றல்ல என தெரிவித்துள்ளனர்.