இலங்கை பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடி உடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த ‘மிதிலி’ புயலானது வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து, வங்கதேசம் கடற்கரை அருகே நேற்று முன் தினம் கோப்புராராவில் கரையை கடந்தது.
இந்நிலையில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும் இடி , மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என நேற்றைய தினமே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று(நவ 20) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும்.
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |