தென்தமிழகம் உட்பட அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் மழை- இந்திய வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை மையம் கூறியதாவது..
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது, இன்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. கடந்த 17, 18-ம் திகதிகளில் தென் தமிழகத்தில் அதிகனமழை பெய்த காரணத்தால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
PTI
இந்நிலையில் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்த மழையானது அடுத்த 7 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |