காபூல் விமான நிலையத்தில் மனைவியுடன் சிக்கியுள்ள சென்னையை சேர்ந்த 31 வயது இளைஞன்! வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ
காபூல் விமான நிலையத்தில் தனது மனைவியுடன் சிக்கியுள்ள சென்னையை சேர்ந்த ஒருவர் அங்கிருப்போரை காப்பாற்றும்படி உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த டாக்டர். முகமது ஆஷிப் ஷா (31) என்பவர் காபூலில் உள்ள பக்தர் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணிபுரிகிறார்.
தற்போது தாலிபான்கள் காபூலை முழுமையாக கைப்பற்றிவிட்ட நிலையில் வெளிநாட்டவர்கள் அங்கிருந்து தப்பி சொந்த ஊருக்கு செல்கின்றனர். அந்த வகையில் ஷா விமான நிலையத்தில் சிக்கி கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், விமான நிலையத்தில் நள்ளிரவு 12 மணியில் இருந்து காத்திருக்கிறோம் எங்களால் இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இங்கு 280 பேர் காத்து கொண்டிருக்கிறோம். விமான நிலையத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது.
அனைத்து தரப்பினரின் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ள. அடுத்து என்ன செய்ய வேண்டுமென தெரியவில்லை. அனைவரையும் மிகுந்த பணிவுடன் கேட்டு கொள்கிறோம். இங்கு தவிக்கும் எங்களை விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதியுங்கள்.
விமான நிலையத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த பாதுகாப்பு அதிகாரி இருக்கிறார். பல்லாயிரக்கணக்கானோர் விமான நிலையத்தை நோக்கி அணிவகுத்து நிற்கும் எங்கள் அவல நிலையை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல் விமான நிலையத்திற்குள் நுழைவது சாத்தியமில்லை. கடினமான காலங்களில் எங்களுக்கு உதவுமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இது போன்ற சூழலில் இருந்து எங்களை அழைத்து செல்லுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.