சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம்.. ஒரு முன்னேற்றமும் இல்லை: அன்புமணி ஆவேச பேச்சு
பரவலான மழை, மிதமான மழை என்று சொல்வதற்கு 5 -ம் வகுப்பு படிக்கும் மாணவனே போதும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக பேசியுள்ளார்.
வெள்ளம் பாதித்த பகுதியில் ஆய்வு
தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்," தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மக்கள் இதுபோன்ற மழையை இதுவரை பார்த்ததில்லை என்று கூறுகின்றனர். பெரிய அளவில் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
சில இடங்களுக்கு இன்னும் அதிகாரிகள் செல்லவில்லை. எத்தனை அமைச்சர்கள் இருந்தாலும் அதிகாரிகள் இருந்தாலும் போதுமானது இல்லை. அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகையை மக்களுக்கு உயர்த்தி வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம்
மேலும் பேசிய அவர், "வரும் முன்பே காப்போம் என்பதும், வந்த பிறகும் காப்போம் என்பதும் அரசுக்கு கிடையாது. சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். சுதந்திரத்திற்கு முன்பு எப்படி இருந்ததோ, அப்படியே தான் இருக்கிறது.
பரவலாக மழை, மிதமான மழை என்பதை 5 -ம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட சொல்லிவிடலாம். எந்தவொரு தொழில்நுட்ப முன்னேற்றமும் இல்லை. வானிலை ஆய்வு மையத்தை மூடிவிட வேண்டும்’’ என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |