சென்னையில் ஒரே பயணச்சீட்டில் பேருந்து, மெட்ரோ, ரயில் பயணம் - Chennai One செயலி நாளை அறிமுகம்
பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் ஆகியவற்றில் ஒரே பயணச்சீட்டு மூலம் பயணிக்கும் சென்னை ஒன்று செயலி நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னை ஒன்று செயலி
சென்னையில், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயண செய்ய சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் ஆகிய பொதுப்போக்குவரத்துகள் உள்ளன.
தற்போது, சிங்கார சென்னை அட்டை மூலம், பேருந்து மற்றும் மெட்ரோ பயணங்களுக்கு எளிதாக பயணச்சீட்டை பெற முடிகிறது.
இந்நிலையில், பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் ஆகிய அனைத்து போக்குவரத்தையும் ஒரே QR பயணச் சீட்டு மூலம் ஒருங்கிணைக்கும் சென்னை ஒன்று(Chennai One) செயலியை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (CUMTA) உருவாக்கியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(22.09.2025), இந்த செயலியை தொடங்கி வைக்கிறார்.
இதன்மூலம் பொதுமக்கள் பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும், UPI அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிட முடியும்.
இந்தியாவிலே முதல்முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில், இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக CUMTA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செயலி, ஆன்ட்ராய்ட் மற்றும் IOS ஆகிய 2 தளங்களிலும் செயல்படக்கூடியது.வெளிமாநிலங்களில் இருந்து வருவோரின் வசதிக்காக தமிழ், ஆங்கிலம்,கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும். இனி பொது மக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |