பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி.., ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்க இந்த விடயம் செய்தாரா?
சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கார்த்தியாயினி பற்றிய பின்னணியை பார்க்கலாம்.
வேட்பாளர் கார்த்தியாயினி
சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் பி. கார்த்தியாயினி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர் ஆவார். அப்போது நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளானவர்.
கடந்த 2011 மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக இறங்கிய கார்த்தியாயினி, திமுக வேட்பாளரை 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மேயரானார்.
இவருடைய மேயர் பதவி காலத்தில் தான் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா உத்தரவிட்டார்.
இவர் செய்த விடயம்
அப்போதைய நேரத்தில் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவின் போராட்டம் நடத்தினர். அதே நேரத்தில் நீதிபதியை விமர்சித்து கார்த்தியாயினி தீர்மானம் போட்டார்.
மேயர் பதவியில் இருக்கும் போது நீதிபதியை விமர்சிக்க கூடாது என்பதை மறந்து ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் கார்த்தியாயினி நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர்.
மேலும், நீதிபதியின் உருவ பொம்மையையும் எரித்தனர். பின்னர், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பத்திரிகை செய்தியாக அதை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
பின்னர், மேயராக இருந்த கார்த்தியாயினி மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு, ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவில் முக்கியத்துவம் இல்லாததால் பாஜகவில் இணைந்தார். தற்போது, சிதம்பரம் தொகுதி வேட்பாளராக போட்டியிட பாஜகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் அதிமுக சார்பில் சந்திரகாசன் போட்டியிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |