காதுகளில் துவாரம் இல்லாமல் பிறந்த குழந்தை: 10 வருடமாக அவதிப்பட்ட சிறுமியின் சோகக் கதை
கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்குப் பிறந்த குழந்தைகளில் ஒன்று, காதுகளில் துவாரம் இல்லாமல் பிறந்தது. காதுகளில் துவாரம் இல்லாததால் அந்தக் குழந்தையால் எந்த சத்தத்தையும் கேட்க இயலாது.
10 ஆண்டுகள் காத்திருப்பு
கேரளாவைச் சேர்ந்த ராஜீவ், சங்கீதா தம்பதியரின் இரண்டாவது பிள்ளை அக்ஷிதா. பிறக்கும்போதே அக்ஷிதாவுக்கு காதுகளில் துவாரம் இல்லாததால், அவளை பல மருத்துவர்களிடம் கொண்டு சென்றிருக்கிறார்கள் அவளது பெற்றோர்.
ஆனால், அவளுக்கு 10 வயது ஆகும் வரை எதுவும் சொல்ல முடியாது என மருத்துவர்கள் கூறிவிடவே, 10 ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்திருக்கிறார்கள் ராஜீவ், சங்கீதா தம்பதியர்.
கிடைத்த ஏமாற்றங்கள்
10 வயதானபின் அக்ஷிதாவை பிரபல மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் செல்ல, அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தரும் செய்தி ஒன்றை அந்த மருத்துவமனை கொடுத்துள்ளது.
அதாவது, அறுவை சிகிச்சை செய்தாலும் அக்ஷிதாவுக்கு காது கேட்க 10 சதவிகித வாய்ப்புதான் உள்ளது என்றும், அவளது முகம் ஒரு பக்கமாக திரும்பிவிடும் அபாயம் உள்ளது என்றும் மருத்துவர்கள் கூற, அக்கிருந்து வெளியேறிய தம்பதியர், ராஜீவ் முன்னாள் இராணுவத்தினர் என்பதால், இராணுவ மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்கள்.
ஆனால், அங்கு ராஜீவ் சங்கீதா தம்பதியரை மிக மோசமாக நடத்தி, கிட்டத்தட்ட அங்கிருந்து துரத்தியுள்ளார்கள் மருத்துவர்கள்.
Photo: Special arrangement
கடைசியாக, கேரளாவிலுள்ள Thrissur Jubilee Mission Hospital என்னும் மருத்துவமனையை அடைந்துள்ளார்கள் ராஜீவ் சங்கீதா தம்பதியர்.
அங்கு காது, மூக்கு, தொண்டை நிபுணரான Dr. ராஜேஷ் குமார் என்பவரை சந்திக்க, அறுவை சிகிச்சை செய்யலாம் என முடிவாகியுள்ளது.
அந்த அறுவை சிகிச்சைக்கான கருவியின் விலை மட்டுமே 7,87,000 ரூபாய். ஈ.எஸ்.ஐ அமைப்பின் உதவியுடன் 5,35,000 ரூபாய் வழங்கப்பட்டு, 10 நாட்களுக்குமுன் அந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரிய அறுவை சிகிச்சை
விடயம் என்னவென்றால், இது ஒரு அரிய வகை அறுவை சிகிச்சை. இதற்கு முன்பும் இதேபோல் அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன என்றாலும், அவற்றில், அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, வெளியில் தெரியும் வகையில் ஒரு கருவி நோயாளியில் தலையில் பொருத்தப்பட்டிருக்கும்.
ஆனால், அக்ஷிதாவுக்கு செய்யப்பட்ட அறுவை சிகீச்சையிலோ, அந்த கருவிகள் அனைத்துமே அவளது மண்டை ஓட்டில், தோலுக்குக் கீழே பொருத்தப்பட்டிருக்கும் என்பதால், வெளியே எதுவுமே தெரியாது.
Photo: Special arrangement
தற்போது, அறுவை சிகிச்சை மூலம், அக்ஷிதாவின் காதுக்குள் எலும்புடன் பொருந்தும் வகையில் அந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ளதால், அந்த உள்காயம் ஆறும் வரை அவள் ஒரு மாதம் வரை காத்திருக்கவேண்டும்.
அந்த காயம் ஆறுவதற்காக அக்ஷிதாவும், குடும்பத்தினரும் காத்திருக்கிறார்கள். அந்தக் காயம் ஆறியதும், அந்தக் கருவியை இயக்கும்போது தங்கள் மகளால் தாங்கள் பேசுவதைக் கேட்கமுடியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் அக்ஷிதாவின் பெற்றோர்.