ஆப்கானில் உள்ள குழந்தைகளின் நிலை மோசமாக உள்ளது! சிறுமிகள் அச்சத்துடன்... வெளியான அதிர்ச்சி தகவல்
ஆப்கானிஸ்தானில் உள்ள குழந்தைகளின் நிலை மிக மோசமாக உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தகவலை ஐ.நா. குழந்தைகள் நிதியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து யுனிசெஃப் தெற்காசியாவின் இயக்குனர் ஜார்ஜ் லாரியா-அட்ஜே கூறுகையில், மோதல் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக ஆப்கானிஸ்தான் குழந்தைகளின் நிலை மோசமாக உள்ளது.
பாதுகாப்பு நெருக்கடி, உணவுப் பொருட்கள் விலை உயர்வு, கடுமையான வறட்சி, கரோனா பரவுதல் மற்றும் கடுமையான குளிர்காலம் உள்ளிட்ட காரணிகளால் குழந்தைகள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் ஆபத்தில் இருக்கின்றனர்.
போலியோ, டெட்டானஸ் மற்றும் பிற நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் அடிப்படை சுகாதாரப் பாதுகாப்பு அங்கு இல்லாமல் உள்ளது. நாட்டில் போர் சூழல் நிலவி வருவதால், பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் பள்ளிகள் மற்றும் தங்கள் நண்பர்களிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய போக்கு தொடர்ந்தால், ஆப்கானிஸ்தானில் ஐந்து வயதுக்குட்பட்ட 10 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ள நேரிடும்.
அதுபோன்று 22 லட்சம் சிறுமிகள் உள்பட 40 லட்சத்துக்கும் அதிகமான சிறார்கள் பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கவலை, அச்சங்களுடன் போராடுகிறார்கள் என கூறியுள்ளார்.