லஞ்சம் பெற்ற முன்னாள் வங்கி அதிகாரிக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சீனா
சீனாவில் 155 மில்லியன் டொலர் லஞ்சம் பெற்ற முன்னாள் வங்கி அதிகாரிக்கு மரண தண்டனை நிறைவேற்றபட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முன்னாள் மூத்த வங்கி அதிகாரி பாய் தியான்ஹுய் (Bai Tianhui) மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
China Huarong International Holdings என்ற சொத்து மேலாண்மை நிறுவனத்தின் பொது மேலாளராக பணியாற்றியவர் தியான்ஹுய்.
அவர் 1.1 பில்லியன் யுவான் (சுமார் 155 மில்லியன் அமெரிக்க டொலர்) அளவிற்கு லஞ்சம் பெற்றதாக குற்றம் நிரூபிக்கப்பட்டது.

2024 மே 28 அன்று, தியான்ஜின் இரண்டாம் இடைநிலை மக்கள் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. பின்னர், சீனாவின் உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பை உறுதிப்படுத்தியது.
“பெற்ற லஞ்சத் தொகை மிகப்பெரியது, குற்றத்தின் சூழ்நிலை மிகக் கடுமையானது, சமூகத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “அவரது செயல்கள் நாட்டின் நலனுக்கும், மக்களின் நலனுக்கும் தீங்கு விளைவித்தன. எனவே கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
தண்டனை நிறைவேற்றுவதற்கு முன், தியான்ஹுய் தனது நெருங்கிய உறவினர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் எவ்வாறு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த வழக்கு, சீனாவின் மத்திய ஒழுக்கக் கண்காணிப்பு ஆணையம் முன்னெடுத்துவரும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.
2025-ஆம் ஆண்டில் மட்டும் 54 அரசு அதிகாரிகள், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, 2021-ஆம் ஆண்டு, தியான்ஹுயின் முன்னாள் மேலாளரும் China Huarong Asset Management நிறுவனத்தின் தலைவர் லை சியோமின் (Lai Xiaomin) ஊழல் குற்றச்சாட்டில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம், சீனாவில் ஊழல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மீண்டும் வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China banker execution, Bai Tianhui bribery case, 155 million dollar corruption China, Tianjin court death sentence, Supreme Peoples Court China, China Huarong International Holdings, Anti-corruption campaign China, Lai Xiaomin execution 2021, Chinese financial corruption news, Death penalty for bribery China