தடுப்பூசிக்காக போராடும் ஏழை நாட்டிற்கு 1 லட்சம் டோஸ்களை நன்கொடையாக அளித்த பிரபல நாடு!
ஈக்வடோரியல் கினியாவுக்கு சீனா 1,00,000 தடுப்பூசி டோஸ்களை நன்கொடையாக அளித்துள்ளது.
தடுப்பூசிகளை வாங்குவதற்கு போராடும் ஏழை நாடுகளுக்கு சீனா தொடர்ச்சியான நன்கொடைகளை அளித்து வருகிறது.
நன்கொடையின் ஒரு பகுதியாக சீனா 1,00,000 கொரோனா தடுப்பூசி டோஸ்களை மத்திய ஆபிரிக்க நாடான எக்குவடோரியல் கினியாவிற்கு அனுப்பியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவின் Sinopharm உருவாக்கிய டோஸ்கள் புதன்கிழமை தலைநகர் மலாபோவுக்கு வந்ததாகவும், 50,000 பேருக்கு அல்லது ஈக்வடோரியல் கினியாவின் மக்கள் தொகையில் 4 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு அவை போதுமானதாக இருக்கும் என எக்குவடோரியல் கினியா அரசாங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசி நன்கொடையாக அளிப்பதின் மூலம் நல்லெண்ணத்தை வளர்ப்பதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மாதம் உலகளவில் 13 நாடுகளுக்கு தடுப்பூசி உதவியை வழங்குவதாகவும் மேலும் 38 நாடுகளுக்கு உதவ திட்டமிட்டுள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.
கடந்த வாரம், கினியாவிற்கு 2,00,000 தடுப்பூசி டோஸ்களையும், காங்கோ குடியரசிற்கு 1,00,000 டோஸ்களை நன்கொடை அளிக்க திட்டமிட்டுள்ளதாக சீனா தெரிவித்தது.
எக்குவடோரியல் கினியாவின் துணை ஜனாதிபதியும், ஜனாதிபதி Teodoro Obiang-ன் மகனுமான Teodoro Obiang Nguema Mangue, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து சுகாதார ஊழியர்கள் மற்றும் நோய்த்தொற்றால் அதிக ஆபத்தில் உள்ள நபர்களுக்கு போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.