ட்ரம்பின் வரி விதிப்பு அமுல்... அதே வேகத்தில் வலுவாக திருப்பியடித்த சீனா
சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையாக, சீனா செவ்வாயன்று அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்தது.
துரித நடவடிக்கையாக
இதனால் தற்போது உலகின் இரண்டு முன்னணி பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் மீண்டும் தொடங்கியுள்ளது. அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீனப் பொருட்களுக்கும் ட்ரம்பின் கூடுதல் 10 சதவிகித வரி அமுலுக்கு வந்தது.
இந்த நிலையிலேயே, துரித நடவடிக்கையாக அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் எல்என்ஜிக்கு 15 சதவிகித வரியும், கச்சா எண்ணெய், பண்ணை உபகரணங்கள் மற்றும் சில வாகனங்களுக்கு 10 சதவிகித வரியும் விதிக்கப்படும் என்று சீனாவின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வரி விதிப்பு எதிர்வரும் 10ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் சீனா அறிவித்துள்ளது. அத்துடன் கூகிள் நிறுவனம் மீது முறையான விசாரணையை முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இதனிடையே, தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்காக டங்ஸ்டன், டெல்லூரியம், ருத்தேனியம், மாலிப்டினம் மற்றும் ருத்தேனியம் தொடர்பான பொருட்களின் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதாக சீனாவின் வர்த்தக அமைச்சகமும் அதன் சுங்க நிர்வாகமும் தெரிவித்துள்ளது.
சுத்தமான எரிசக்தி மாற்றத்திற்கு அவசியமான அரிய மண் தாதுக்களில் உலகின் பெரும்பகுதியை சீனா கட்டுப்படுத்துகிறது என்பது கூடுதல் தகவல். கனடா மற்றும் மெக்ஸிகோ மீதான 25 சதவிகித வரியை கடைசி நொடியில் ட்ரம்ப் இடைநிறுத்த, சீனாவுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை.
2018 ஆம் ஆண்டு தனது முதல் பதவிக்காலத்தில், ட்ரம்ப் சீனாவுடன் அதன் மிகப்பெரிய அமெரிக்க வர்த்தக உபரி தொடர்பாக இரண்டு ஆண்டுகால வர்த்தகப் போரைத் தொடங்கினார்.
இதன் தொடர்ச்சியாக விதிக்கப்பட்ட வரிகளால் நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் உலகளாவிய விநியோக நடவடிக்கைகளை சீர்குலைத்து உலகப் பொருளாதாரத்தை சேதப்படுத்தியது.
அமெரிக்காவின் பிரச்சனை
மிக மோசமான அந்த வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவர, 2020ல் அமெரிக்கப் பொருட்களுக்கு ஆண்டுக்கு 200 பில்லியன் டொலர் கூடுதலாகச் செலவிட சீனா ஒப்புக்கொண்டது, ஆனால் கோவிட் தொற்றுநோயால் அந்தத் திட்டம் தடம் புரண்டது.
மட்டுமின்றி, சீனாவின் வருடாந்திர வர்த்தக பற்றாக்குறை 361 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது என, கடந்த மாதம் வெளியிடப்பட்ட சீன சுங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவிற்குள் கொடிய ஃபெண்டானைல் புழக்கத்தை சீனா தடுக்காவிட்டால், அதன் மீதான வரிகளை மேலும் அதிகரிக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரித்தார்.
ஆனால் ஃபெண்டானைல் விவகாரம் அமெரிக்காவின் பிரச்சனை என்றே சீனா பதிலளித்துள்ளது. அத்துடன் உலக வர்த்தக அமைப்பில் ட்ரம்பின் வரி விதிப்புகளுக்கு எதிராக முறையிடும் என்றும் அமெரிக்காவுக்கு எதிராக பிற நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அறிவித்திருந்தது.
இதனிடையே, அமெரிக்கா மீதான சீனாவின் வரி வதிப்பு நடவடிக்கையை அடுத்து ஹொங்ஹொங்கில் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |