புடினிடம், கிம் ஜாங் உன் சொன்ன ஒற்றை வார்த்தை: உலகிற்கு ராணுவ பலத்தை காட்டிய சீனா!
சீனாவின் வெற்றி அணிவகுப்பில் ஷி ஜின்பிங், விளாடிமிர் புடின் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோர் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு இருப்பது உலக அரங்கில் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.
காட்சிப்படுத்தப்பட்ட சீன இராணுவ பலம்
ஜப்பானை இரண்டாம் உலக போரில் வீழ்த்தியதை கொண்டாடும் விதமாக சீனா தனது 80 வது வெற்றி தினத்தை கொண்டாடி வருகிறது.
இந்த வெற்றி தின கொண்டாட்டத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் அந்நாட்டின் அதிநவீன லேசர் ஆயுதங்கள், அணுசக்தி ஏவுகணைகள் மற்றும் ராட்சத நீர்மூழ்கி ட்ரோன்கள் ஆகிய இராணுவ பலத்தை விருந்தினர்களுக்கு காட்சிப்படுத்தினார்.
இந்த அணிவகுப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உடனான ரஷ்ய மற்றும் வட கொரிய நாட்டு தலைவர்களின் இருப்பு உலக அரங்கில் வலிமையான அரசியல் குறியீடாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த மூன்று தலைவர்களும் முதல் முறையாக ஒன்றாக பொது வெளியில் தோன்றியுள்ளனர்.
இவர்கள் தவிர பிற நாட்டு தலைவர்களும் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
வட கொரியாவின் சகோதர கடமை
இந்த சந்திப்பின் போது வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம், ரஷ்யாவிற்கு உதவுவது தங்களின் சகோதர கடமை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியா ஆயுதங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் விமர்சனம்
உலகின் மூன்று முக்கிய தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில், நீங்கள் அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்யும் போது, ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னிற்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கவும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |