200 மடங்கு வேகத்தில் இராணுவத்தைக் கட்டமைக்கும் எதிரி: அமெரிக்காவிற்கு எச்சரிக்கை
அமெரிக்காவை விட 200 மடங்கு வேகத்தில் சீனா தனது இராணுவத்தைக் கட்டமைப்பதாக நேட்டோ தலைவர் மார்க் ரூட் அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.
இராணுவ அணிவகுப்பு
அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளை விட சீனா அதிநவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்ட கப்பல்களை வேகமாக உருவாக்கி வருவதாக மார்க் ரூட் தெரிவித்துள்ளார்.
இது உண்மையிலேயே தம்மை கவலைப்பட வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவின் விளாடிமிர் புடின் மற்றும் வட கொரியாவின் கிம் ஜோங் உன் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சீனாவின் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பே மார்க் ரூட்டின் கவலைகளுக்கு காரணம்.
மேலும், அமெரிக்காவிற்கு எதிராக சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவும் சதி திட்டம் தீட்டுவதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். மட்டுமின்றி, சீனாவின் அந்த பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு அமெரிக்கா உருவாக்கி வைத்துள்ள பிம்பத்திற்கு பரவலாக கடும் சவாலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிராகாவில் நடந்த நேட்டோ பாதுகாப்பு உச்சிமாநாட்டின் போது, அமெரிக்கா இராணுவ ரீதியாக இன்னும் தயாராக இருக்க வேண்டும் என்று ரூட் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், கப்பல் கட்டும் துறையைப் பொறுத்தவரை, நமது கடற்படையைப் பொறுத்தவரை - குறிப்பாக அமெரிக்க கடற்படையைப் பொறுத்தவரை - மிகவும் கவலைப்படும் வகையில் உள்ளதாகவே ரூட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை விட சீனா வசம் அதிக எண்ணிக்கையிலான கப்பல்கள் இருப்பதாக குறிப்பிட்ட ரூட், சீனாவின் தற்போதைய நிலையை எட்டக் கூடிய வேகத்தில் அமெரிக்கா இல்லை என்றும் அவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீனாவின் கப்பல் கட்டும் திறன் அமெரிக்காவை விட 200 மடங்கு அதிகம் என குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு நிபுணர் ஒருவர், அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் தாமதங்களால் அமெரிக்க கப்பல் கட்டும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
உலகிலேயே மிகப்பெரியது
சீனா உடனான இடைவெளியை குறைக்க வேண்டும் என்றால், ஐரோப்பாவும் களமிறங்க வேண்டும் என மார்க் ரூட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கடற்படை என்பது மேற்கத்திய நாடுகளில் முதலிடத்தில் உள்ளது.
ஆனால் பல்வேறு காரணங்களால் தற்போது அதன் பலம் குறைந்து வருவதாகவே கூறப்படுகிறது. கடந்த டிசம்பரில், சீன கடற்படை உலகிலேயே மிகப்பெரியது என்று அமெரிக்காவின் பென்டகன் வெளிப்படுத்தியுள்ளது.
சீனாவிடம் 370 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் உள்ளன. சீனாவின் கடற்படையில் பெரும்பகுதி நவீன கப்பல்களைக் கொண்டுள்ளது, அவை நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை.
இந்த ஆண்டு சீனா தனது கடற்படையுடன் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலை இணைக்க உள்ளது. இதனிடையே, சீனாவின் இராணுவ அதிகரிப்பு காரணமாக, அமெரிக்கா தனது கவனத்தை இந்தோ-பசிபிக் மீது திருப்ப முடிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |