தைவான் கடற்கரைகளில் ரோபோ ஓநாய்களைக் களமிறக்கத் திட்டமிடும் சீனா
தைவான் மீது சீனா படையெடுக்கலாம் என்ற அச்சத்தை உறுதி செய்யும் வகையில், ரோபோ ஓநாய்களைக் களமிறக்கி அந்த நாடு போர்ப்பயிற்சியை முன்னெடுத்துள்ளது.
ரோபோ ஓநாய்கள்
ரோபோக்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய ஒரு புதிய போர் தந்திரத்தை சோதித்து வருவதாக சீனா இராணுவம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் அரசு செய்தி ஊடகத்தில் வெளியான காணொளி ஒன்றில், ரோபோ ஓநாய்களைப் பயன்படுத்தி ட்ரோன்களால் கடற்கரையில் பயிற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போர்க்களத்தில் இராணுவ வீரர்களின் உயிரிழப்புகளை குறைக்கும் வகையிலேயே இந்த ரோபோ ஓநாய்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ரோபோ ஓநாய்களால் முள்வேலி மற்றும் பிற தடைகளை எளிதில் அழிக்க முடியும்.
உக்ரைன் இராணுவம் ட்ரோன்களால் ரஷ்யாவிற்கு கடும் நெருக்கடி அளித்து வருவது போன்று, தற்போது சீனாவும் அதே பாணியில் ரோபோ ஓநாய்களை தயார் செய்து வருகிறது.
சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ரோபோ ஓநாய்கள் துல்லியமாக சுடவும், கரடுமுரடான நிலப்பரப்புகளிலும் வேலை செய்யவும் முடியும் என தெரிய வருகிறது.

சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ்
சுமார் 70 கிலோ எடை கொண்ட இந்த ரோபோவானது 100 மீற்றர் தொலைவில் இருக்கும் இலக்கையும் தாக்க முடியும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், சீனா டசின் கணக்கான போர்க்கப்பல்களை நிறுத்தி, தைவானை சுற்றி வளைத்து அச்சுறுத்தும், பெரிய அளவிலான போர் பயிற்சிகளை நடத்தியது.
பல நாட்கள் நீடித்த அந்தப் போர் பயிற்சியை அடுத்து தைவானும் தங்கள் போர் விமானங்களை அனுப்பி எச்சரிக்கை செய்தது.

இந்த நிலையில், தேவைப்பட்டால் இராணுவத்தைக் களமிறக்கியும் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டிய ஒரு மாகாணமாக தைவானை ஜனாதிபதி ஜி ஜின்பிங் பார்க்கிறார் என்றே கூறப்படுகிறது.
ஆனால், தைவான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. தைவானுக்கு எதிரான சீனாவின் எந்தவொரு முடிவும் அமெரிக்காவை தலையிட வைக்கும் என்றே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |